புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை நேற்று வெளியானது. தலைமை அமைச்சர் ரணில் விக்கிர மசிங்க அதனை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.
இலங்கை பிரிக்கப்படாத, பிரிக்கப்பட முடியாத நாடு என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்று பரிந்துரைக்கிறது.
வடக்கு –கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பில் மூன்று தெரிவுகளை முன்வைத்து இணக்கமின்மையை வெளிப்படுத்தியுள்ளது. தேசியம், மாகாணம், உள்ளூரதிகார சபை ஆகிய மூன்று மட்டங்களில் அதிகாரங்களைப் பகிர்வதற்கு முன்மொழிந்துள்ளது.
காணிப் பயன்பாட்டு அதிகாரத்தை மாகாணங்களுக்கு வழங்க யோசனை முன்வைத்துள் ளது. பகிரப்பட்ட அதிகாரங்களைத் திரும்பப் பெறுவதற்கு மத்திய அரசுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கும் யோசனைகளும் வைக்கப்பட்டுள்ளன. மாகாணப் பிரதிநிதி களைக் கொண்ட இரண்டாவது சபை ஒன்றை நிறுவவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. நாட்டை வழிப்படுத்த அரசமைப்புப் பேரவை ஒன்றை அமைப்பதற்கான முன்மொழியும் உள்ளது. பெண்களுக்கு 50 வீத இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு வகை செய்யப்படவேண்டும் என்றும் கூறப்பட்டுள் ளது.
இணக்கமில்லை
புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் உறுப்பினர்கள் இடையே இந்த இடைக்கால அறிக்கை தொடர்பில் இணக்கம் ஏற்படவேயில்லை. அவர்களின் கருத்துக்கள் மட்டுமே இடைக்கால அறிக்கையாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்களுடனும் ஒவ்வொரு கட்சியும் இணக்கமின்மையை வெளிப்படுத்தியுள்ளன. அவற்றை தத்தமது தனிப்பட்ட அறிக்கைகளில் பின்னிணைப்பாகச் சேர்த்துள்ளன.
பின்னிணைப்புகளைச் சேர்த்துப் பார்க்கும்போது இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ள சிறப்பான விடயங்கள் எவையுமே இணக்கம் காணப்படாதவை என்பது தெளிவாகின்றது.
116 பக்க அறிக்கை
அறிக்கை 116 பக்கங்களைக் கொண்டிருக்கிறது. அதில் 44 பக்கங்கள் மட்டுமே வழிகாட்டல் குழுவால் தயாரிக்கப்பட்டவை. மிகுதி 70 பக்கங்களும் கட்சிகளின் இணைப்புகளால் நிரப்பப்பட்டுள்ளன. இதனையும் உள்ளடக்கிய 12 பகுதிகளாக அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசமைப்பு எப்படிப்பட்ட அடிப்படைகளுடன் உருவாக்கப்படவேண்டும் என்பதற்கான வரையறையை இந்த அறிக்கை கட்டமைத்துள்ளது. இலங்கை ஒற்றையாட்சி நாடாக இருக்க முடியாது என்று அது தெளிவுபடுத்தியுள்ளது. அதற்குப் பதிலாக சிங்களத்தில் ஏகிய ராஜ்ஜிய என்பதும் தமிழில் ஒருமித்த நாடு என்பதும் பயன்படுத்தபடும் பதங்களாக இருக்கும்.
அதன் பொருள் பிரிக்கப்படாத, பிரிக்கப்படமுடியாத நாடு என்பதாகும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதிகாரப் பகிர்வு
அதிகாரப் பகிர்வு தொடர்பில் சாதகமான நிலைப்பாடுகள் காணப்பட்டாலும், தமிழ் மக்களின் எதிர்பார்க்கைக்குரிய வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பு இந்த அறிக்கையில் இல்லை.
ஆனால், அது பற்றி வழிகாட்டல் குழு தொடர்ந்து பரிசீலிப்பதற்கு அறிக்கையில் இடமளிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்புத் தொடர்பில் மூன்று தெரிவுகளை அறிக்கை முன்வைத்துள்ளது.
தற்போதுள்ள அரசமைப்பில் சொல்லப்பட்டுள்ளமைபோன்ற மாகாணங்களை இணைப்பது குறித்த முடிவை அந்த மக்களிடமிருந்தே பெறுவது, அதாவது இணைப்புத் தொடர்பில் மக்கள் கருத்தை அறிவது, மாகாணங்களை இணைப்பதற்குப் புதிய அரசமைப்பில் இடம் வழங்கக்கூடாது, வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பதை புதிய அரசமைப்பு உறுதிப்படுத்துவது ஆகிய தெரிவுகள் ஆராயப்பட்டன என்று அறிக்கை கூறுகின்றது. ஆனால் அது பற்றிய இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
அந்தந்தப் பகுதிகளில் உள்ள சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அரசமைப்பு உறுதி செய்யவேண்டும் என்று மக்கள் பேரவைகள் வலியுறுத்தியுள்ளன என்கிற விடயம் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. அதேநேரம், குடியரசின் ஆட்புல எல்லைக்கும் அதன் இறைமைக்கும் தெளிவான ஆபத்தை ஏற்படுத்துகின்ற ஆயுதக் கலவரத்தையோ அல்லது கிளர்ச்சியையோ ஊக்குவிக்கின்ற அல்லது அரசமைப்பு மீதான ஒரு சர்வதேச மீறலில் ஈடுபடுகின்ற நிலைமையொன்று மாகாண சபையால் தோன்றும்போது தலைமை அமைச்சரின் ஆலோசனையின் பேரில் அரச தலைவரின் அறிவிப்பு ஒன்றின் மூலம் மாகாண நிர்வாகத்தின் அதிகாரங்களை அரச தலைவர் பொறுப்பேற்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது, அவசியமாகும் பட்சத்தில் மாகாண சபையைக் கலைக்கலாம் என்றும் முன்மொழியப்பட்டுள்ளது.
பௌத்தத்துக்கு முன்னுரிமை
இடைக்கால அறிக்கையில் பௌத்த மத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஏனைய மதங்கள் சமமாக மதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தாலும் பௌத்தத்தைப் பாதுகாப்பதும் பேணுவதும் அரசின் கடமை என்று சொல்லப்பட்டுள்ளது. ஏனைய மதங்களின் விடயத்தில் இவ்வாறு கூறப்படவில்லை.
தேசியம், மாகாணம், உள்ளுராட்சி ஆகிய மூன்று மட்டங்களில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என்று இடைக்கால அறிக்கை கூறுகின்றது.
அது எப்படிப்பட்ட விதத்தில் அமைந்திருக்கும் என்பதையும் விளக்குகிறது. உள்ளுராட்சியைப் பொறுத்தவரையில் மாநகரம், பிரதேசம் ஆகிய இரு பகுதிகள் மட்டுமே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர சபைகள் தகுதி நீக்கம் செய்யப்படுகின்றன.
அதிகாரங்கள் தேசிய நிரல், மாகாண நிரல் என்கிற அடிப்படையில் பகிரப்படும். ஒருங்கியை நிரல் வேண்டாம் என்று கூறினாலும் சிலவற்றை ஒருங்கியை நிரலில் வைத்துப் பரிசீலிப்பதற்கான அனுமதியையும் அறிக்கை வழங்கியுள்ளது.
மாகாண ஆளுநரின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அவர் ஒரு நிகழ்வுகளுக்கான தலைவராக மட்டுமே இருப்பார். பாதுகாப்பு, பொருளாதார ஒருங்கிணைப்பு, இறைமை, ஆள்புல ஒருமை ஆகிய விடயங்கள் தேசிய நிரலுக்குரியவை என்றும் ஏனையவை மாகாண நிரலுக்குரியவை என்றும் வகுக்கப்பட்டுள்ளன.
ஆனால், தேசிய தரம் என்ற வகையில் ஏனைய விடயங்களில் தேசிய அரசு தலையிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. உதாரணமாகக் கல்வி, சுகாதாரம் போன்றவற்றின் தேசிய தரத்தை தேசிய அரசே தீர்மானிக்கும். பிரிவினை பற்றிப் பேசவே கூடாது. எந்தவொரு கட்டத்திலும் பிரிவினை தடுக்கப்படுகிறது. பிரிந்து செல்லுதல் குறித்துப் பேசவே முடியாது என்று இடைக்கால அறிக்கை கூறுகின்றது.
எந்தவொரு மாகாணத்தையோ பகுதியையோ தனிநாடாக்குவதற்காக வாதாடுவதோ அதற்காக நடவடிக்கை எடுப்பதோ செய்யப்படக்கூடாதவை என்கிறது அறிக்கை.
அரசியலமைப்பு நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்படும் என்று இடைக்கால அறிக்கை கூறுகின்றது.
காணிகள் அனைத்தும் தேசிய அரசுக்குரியவை எனினும் மாகாணங்களுக்கு உட்பட்ட காணிகள் அனைத்தையும், தேசிய அரசின் தேவைக்காகக் குறித்தொதுக்கப்பட்டவை தவிர அதாவது நீர்ப் பயன்பாடு போன்ற விடயங்களில் தேவைக்காக, பயன்படுத்தும் உரிமை மாகாணங்களுக்குரியது.
அரச காணிகள் தனியாருக்கு வழங்கப்படும்போது காணியற்ற நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அதிலும் முதலில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட உப பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கும், அடுத்து மாவட்டத்தில் உள்ளவர்களுக்கும், அடுத்து மாகாணத்தில் உள்ளவர்களுக்கு இறுதியாக ஏனையவர்களுக்கும் வழங்கப்படும்.
காணி அதிகாரம்
காணி விடயத்தில் மத்திய மாகாண அரசுகளுக்கு இடையில் பிணக்கு ஏற்பட்டால் அதனைத் தீர்ப்பதற்கு நியாய சபை ஒன்ற அரச தலைவரால் அமைக்கப்படும். அதில் மத்திய அரசின் தலைமை அமைச்சர், மாகாண முதல் அமைச்சர் ஆகியோரின் பிரதிநிதிகள் நியமிக்கப்படுவர்.
தேசிய பாதுகாப்புக்காக நியாயமான காரணங்களைக் குறிப்பிட்டு தலைமை அமைச்சரின் பரிந்துரையின் பேரில் அரச தலைவர் காணிகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரமுடியும். தேசிய காணி ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்படும்.
பகிரப்பட்ட அதிகாரங்கள் மாகாண சபைகளிடம் இருந்து ஒருதலைப்பட்சமாகத் திரும்பப் பெறப்படாமல் இருப்பதை உறுதிசெய்வதற்காக, அரசமைப்பு ரீதியாகப் போதிய காப்புகளை கடைப்பிடிக்காமல் மத்திய அரசு மாகாண சபை நிரலில் உள்ள கருமங்கள் மீதான சட்டவாக்கத்தை அத்தகைய சட்டவாக்கத்துடன் உடன்படாத மாகாணசபை ஏதேனும் தொடர்பாக அமைக்கக்கூடாது என்றும் அறிக்கை கூறுகின்றது.
இரண்டாவது சபை
பெரும்பாலும் மாகாண சபைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டாவது சபை ஒன்றை உருவாக்கவும் அறிக்கை பரிந்துரைக்கிறது. மாகாணங்களில் இருந்து 45 உறுப்பினர்களையும் நாடாளுமன்றம் நியமிக்கும் 10 உறுப்பினர்களையும் உள்ளடக்கிய 55 உறுப்பினர்களை அந்தச் சபை கொண்டிருக்கும்.
சட்டவாக்கத்தை நிறுத்தும் அதிகாரம் இந்தச் சபைக்குக் கிடையாது என்றபோதும் அதனை நாடாளுமன்றத்திற்குத் திருப்பி அனுப்ப இந்தச் சபையால் முடியும்.
அரசமைப்புத் திருத்தங்களைச் செய்யவேண்டும் என்றால் இரண்டு சபைகளிலும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறவேண்டும். நேரடி மற்றும் விகிதாசார முறைகளை உள்ளடக்கிய கலப்புத் தேர்தல் முறைமையொன்றே பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் 233 ஆசனங்களைக் கொண்டிருக்கும்.
அதில் 140 ஆசனங்கள் நேரடி தேர்தல் மூலமும் 93 ஆசனங்கள் விகிதார பிரதிநிதித்துவம் மூலமும் தெரிவு செய்யப்படும். இடம்பெயர்வுகளால் ஏற்பட்டுள்ள ஆள்குறைவைக் கணக்கில் எடுத்து குறிக்கப்பட்ட காலத்திற்கு வடக்கு மாகாணத்திற்கு மேலதிக ஆசனங்கள் ஒதுக்கப்படவேண்டும்.
நிறைவேற்று அரச தலைவர் முறைமை நீக்கப்படவேண்டும், மாகாணங்களுடன் தொடர்புபட்ட அதிகாரங்கள் அரச தலைவருக்கு வழங்கப்படவேண்டும், அரச தலைவரை நாடாளுமன்றமே நியமிக்க வேண்டும் என்கிற பரிந்துரைகளும் செய்யப்பட்டுள்ளன.
அரசமைப்புப் பேரவை
அரசமைப்புப் பேரவை ஒன்றை உருவாக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்களின் உறுப்பினர்களை நியமிப்பது மற்றும் பொதுச் சேவை, நீதிச் சேவைகளில் உள்ள உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிப்பது ஆகியவற்றைச் செய்வதற்காக இந்தப் பேரவை உருவாக்கப்படவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
50 வீதத்திற்கு மேற்பட்ட பெண்கள் பிரதிநித்துவக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் தேவையைக் கருத்தில்கொண்டு ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
எனினும் பின்னிணைப்புகளாகக் கொடுக்கப்பட்டுள்ள கட்சிகளின் அறிக்கைகளில் இந்த விடயங்களில் பலவற்றுடன் ஒவ்வொரு கட்சியும் தமது உடன்பாடின்மையை வெளிப்படுத்தியுள்ளன.
ஒவ்வொரு கட்சியும் சில விடங்களில் இணக்கத்தை வெளிப்படுத்திய போதும் முக்கிய விடயங்களில் இணக்கம் எட்டப்படவில்லை என்பதை இணைப்புகள் உறுதிப்படுத்துகின்றன.