அவுஸ்ரேலியாவிற்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டியில் தொடக்க வீரர் தவான் விளையாடமாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்தியா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் 17-ந்திகதி தொடங்குகிறது. இந்த தொடரை அதிக வித்தியாசத்தில் கைப்பற்றி இரு அணிகளும் முதல் இடத்தை பிடிக்க துடிக்கின்றன.
அவுஸ்ரேலியாவிற்கு எதிரான முதல் மூன்று போட்டிக்கான இந்திய அணியில் தொடக்க வீரரான தவான் இடம்பிடித்திருந்தார். தற்போது அவரது மனைவி உடல் நிலை சரியில்லாமல் உள்ளார்.
இதனால் அருகில் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டியிருப்பதால் மூன்று போட்டிகளிலும் கலந்து கொள்ள இயலாது. தன்னை அணியில் இருந்து விடுவிக்குமாறு கிரிக்கெட் வாரியத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.
அவரது வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட பிசிசிஐ அவரை விடுவித்துள்ளது. தவான் இல்லாததால் ரோகித் சர்மா உடன் ரகானே தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது. ரகானே இருப்பதால் மாற்று வீரர் தேர்வு செய்வது தொடர்பாக இந்திய தேர்வுக்குழு முடிவு செய்யவில்லை.
இலங்கைக்கு எதிரான முதல் நான்கு போட்டியில் இடம்பிடித்த தவான் இரண்டு சதங்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவுஸ்ரேலியாவிற்கு எதிரான முதல் போட்டி வருகிற 17-ந்திகதி சென்னையிலும், 2-வது போட்டி 21-ந்தேதி கொல்கத்தாவிலும், 3-வது போட்டி 24-ந்திகதி இந்தூரிலும் நடக்கிறது.