அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றினால் இந்தியா தர வரிசையில் முதல் இடத்தை பிடித்துவிடும்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டி தர வரிசையில் தற்போது தென் ஆப்பிரிக்கா 119 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
இந்தியா, அவுஸ்ரேலியா அணிகள் தலா 117 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளது. ரேட்டிங் பாயிண்ட் அடிப்படையில் அவுஸ்ரேலியா 2-வது இடத்திலும், இந்தியா 3-வது இடத்திலும் உள்ளன.
வீராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஒரு நாள் போட்டி தரவரிசையில் முதல் இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது.
அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றினாலே இந்தியா முதல் இடத்தை பிடித்துவிடும். 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும் போது 120 புள்ளிகளை பெறும். 5-0 என்ற கணக்கில் இந்தியா வென்றால் 122 புள்ளிகளை பெறும். இந்த தொடரை இந்தியா 3-2 என்ற கணக்கில் வென்றால் 118 புள்ளிகள் பெற்று 2-வது இடத்துக்கு முன்னேற முடியும்.
அதே நேரத்தில் அவுஸ்ரேலியா ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கிலோ 4-1 என்ற கணக்கிலோ இந்தியாவை வீழ்த்தினால் தர வரிசையில் முதல் இடத்தை பிடித்துவிடும்.
ஸ்டீபன்சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா – அவுஸ்ரேலியா அணிகள் மோதும் முதல் ஆட்டம் வருகிற 17-ந் திகதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.