20ஆவது திருத்தச்சட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதை கூறியுள்ளார்.
“20 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சில ஐயங்களை எழுப்பியிருந்தது. அதாவது மாகாணசபைகள் 5 வருடங்களுக்கு முன் கலைக்கப்பட்டால் மிகுதி காலத்தை நாடாளுமன்றம் பொறுப்பேற்பது என்பதை நாங்கள் எதிர்தோம். அதேபோல் மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒரே நாளில் நடத்தும் தீர்மானத்தை நாடாளுமன்றம் எடுக்கும் என கூறப்பட்டதையும் நாங்கள் எதிர்தோம். அதே சமயம் 20ஆவது திருத்தச்சட்டம் உயர்நீதிமன்றில் வழக்கில் உள்ள நிலையில் சட்டமா அதிபர் முதல் நாளே அரசாங்கம் செய்யவுள்ள சில திருத்தங்கள் தொடர்பாக கூறியிருக்கின்றார்.
அதில் நாங்கள் கூறிய திருத்தங்களும் உள்ளடங்கியிருக்கின்றது. அதாவது ஒரே நாளில் மாகாணசபைகளுக்கான தேர்தலை நாடாளுமன்றம் தீர்மானிக்காது அதனை தேர்தல் ஆணைக்குழுவே தீர்மானிக்கும்.மேலும் 5 வருடங்களுக்கு முன் மாகாணசபை கலைக்கப்பட்டால் மிகுதி காலத்தில் மாகாண சபைகளின் அதிகாரங்களை நாடாளுமன்றம் எடுக்காது. அந்த காலத்திற்கு இடைக்கால தேர்தல் நடத்தப்படும்.
மேலும், 5 வருடங்களுக்குள் கலைக்கப்பட்டு மிகுதி காலம் 18 மாதங்களுக்கு குறைவாக இருந்தால் இடைக்கால தேர்தல் நடத்தப்படாது. அதற்கு காரணம் தேர்தலுக்கான செலவு மற்றும் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான காலம் போதாமை போன்றவற்றால் அதனை நடத்த முடியாது. இந்த அடிப்படைகளால் 20ஆவது திருத்தச்சட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என்றார்.