நாளை அவுஸ்ரேலியா மோதும் பயிற்சி ஆட்டம்: ரசிகர்கள் இலவசமாக பார்க்கலாம்

அவுஸ்ரேலியா- இந்திய போர்டு பிரசிடென்ட் லெவன் மோதும் பயிற்சி ஆட்டம் சென்னையில் நாளை நடக்கிறது. இந்த பயிற்சி ஆட்டத்தை ரசிகர்கள் இலவசமாக காணலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

முதல் ஒருநாள் போட்டி சென்னையில் நடைபெறுவதால் அவுஸ்ரேலிய வீரர்கள் 2 கட்டங்களாக இங்கு வந்தனர்.

இந்தியா- அவுஸ்ரேலிய அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 17-ந்திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இந்தப் போட்டிக்கு முன்பு அவுஸ்ரேலிய அணி பயிற்சி ஒரு நாள் போட்டியில் விளையாட முடிவு செய்து இருந்தது. அதன்படி அவுஸ்ரேலிய- இந்திய போர்டு பிரசிடென்ட் லெவன் மோதும் பயிற்சி ஆட்டம் சென்னையில் நாளை (செவ்வாய்க் கிழமை) நடக்கிறது. காலை 10 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.

இந்த பயிற்சி ஆட்டத்தை ரசிகர்கள் இலவசமாக காணலாம். சி, டி மற்றும் இ ஸ்டாண்டுகளின் கீழ் பகுதியில் ரசிகர்கள் அமர்ந்து இலவசமாக பார்க்கலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் இரு அணி வீரர்கள் விவரம்:-

அவுஸ்ரேலியா: ஸ்டீவன் சுமித் (கேப்டன்), ஆரோன் பிஞ்ச், வார்னர், ஆஸ்டன் ஆதர், ஹில்டன் கார்ட்ரைட், நாதன் கோல்ட்டர், மேக்ஸ் வெல், மேத்யூ ஹடே, கும்மின்ஸ், பல்க்குனர், ஹாசல்வுட், டிரெவிஸ்வொட், ஸ்டோனிஸ், ஆடம்சம்பா.

இந்திய போர்டு தலைவர் லெவன்: குர்கீத்சிங்மேன் (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ராகுல் திரிபாதி, ரகீல்ஷா, சந்திப்சர்மா, மன்யக் அகர்வால், அவேஷ் கான், சிவம் சவுத்ரி, கோசுவாமி, கார்னீவர், குல்வந்த், குஷாங்பட்டேல், கோவிந்தா போடர், நிதிஷ்ரானா.

ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று 2-வது நாளாக நடந்தது. குறைந்த விலை டிக்கெட் டான ரூ.1,200 மற்றும் ரூ. 4,800-க்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. ரூ. 8 ஆயிரம், ரூ. 12 ஆயிரம் விலையில் மட்டுமே டிக்கெட்டுகள் இருக்கிறது.