ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருள், செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அலசி, அந்த பகுதியில் உள்ளவர்கள், எத்தனை வசதியானவர்கள் என்பதை அலசிச் சொல்ல முடியும் என, நிரூபித்து உள்ளார், அமன் திவாரி.
அமெரிக்காவில் உள்ள, கார்னகி மெலன் பல்கலைக் கழக கணிப்பொறி விஞ்ஞானியான திவாரி, ‘பென்னி ஏ.ஐ.,’ என்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருளுக்கு, நியூயார்க் நகரின் செயற்கைக்கோள் படங்களையும், செழிப்பான பகுதிக்கான அடையாளங்களையும் கற்றுத் தந்தார்.
இதன் அடிப்படையில், பென்னி ஏ.ஐ., துல்லியமாக புகைப்படத்தில் உள்ள பகுதி, உயர் வருவாய், நடுத்தர வருவாய், குறைந்த வருவாய் உள்ள பகுதிகள் எவை என்பதை கண்டு சொல்லிவிடுகிறது.
தன் கணிப்பு சரியா, இல்லையா என்பதை ஒப்பிடுவதற்கு, அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விபரங்களையும், அட்டவணை போட்டுத் தருகிறது.
இந்த பரிசோதனை, பணக்காரர்களை கண்டுபிடிப்பதற்கு அல்ல என்றும், செயற்கை நுண்ணறிவு மென்பொருளால், என்ன செய்ய முடியும்; என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிவதற்கே என்றும், திவாரி தெரிவித்து உள்ளார்.