சக்தியை நாயகியாகப் போற்றும் நவராத்திரி விழாவானது ஒரு கலாசார விழுமியங்களைப் பேணுகின்ற சக்தியின் மகிமையைப் போற்றுகின்ற கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழாவாகும். இதனால்தான் சிவராத்திரிக்கு இல்லாத முக்கியத்துவமும், பிரபல்யமும் சக்தி விழாவாகிய நவராத்திரிக்கு உண்டு.
இவ்விழாவானது ஆலயங்களில் சமய வைபவமாக மட்டுமல்லாமல் இல்லங்கள், பொது மன்றங்கள், பாடசாலைகள், அலுவலகங்கள், வேலைத்தளங்கள் என எல்லா இடங்களிலும் சரஸ்வதி பூஜை என்றும் கலைவிழா என்றும் காலங்காலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இவ்வாறு பலவிதத்திலும் சிறப்பு பெற்ற நவராத்திரி விரத ஆரம்பம் எப்போது என்பதில் இரு பஞ்சாங்கங்களிடையே குழப்பம் நிலவுவதால் மக்களுக்கு ஆதாரபூர்வமாக சரியான தினத்தை தெரிவிக்க வேண்டிய கடப்பாடு உண்டு.
அதாவது திருக்கணித பஞ்சாங்கப் பிரகாரம் 21-.09-.2017 வியாழக்கிழமை எனவும் வாக்கிய பஞ்சாங்கப்படி 20.-09-.2017 புதன்கிழமை எனவும் குறிக்கப்பட்டுள்ளன.
இனி நவராத்திரி ஆரம்பத்தினை நிர்ணயிப்பதற்கான பிரமாணங்களை ஆராய்வோம். இவ்விரதம் சாந்திரமாத அடிப்படையிலேயே நிர்ணயம் செய்யப்படும். அதாவது சந்திரனைக் கொண்டு கணக்கிடப்படும் காலம் என்று பொருள்படும். பொதுவாக தட்சிணாயனத்தில் வரும் விரதங்களில் பெரும்பாலானவை சாந்திரமாத அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுவன. அதன் பிரகாரம் சாந்திரமாத ஆஸ்விஜ சுத்தப்பிரதமையன்று நவராத்திரி விரதம் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்று காரணாகம சுலோகம் கூறுகின்றது.
“ஆஸ்வயுக் சுக்லபகே ஷது ப்ரதிபந் நவம்யந்தகே
ப்ரதிபத்தின மாரப்ய விரதோத்ஸவ மதாசரேத்”
இதன்படி அமாவாசை சேராத பிரதமையில் நவராத்திரி விரதம் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்பது தெளிவாகின்றது. இது பொது விதி.
அமாவாசை சிறிது நேரம் இருக்க பின் பிரதமை தொடங்கி அன்றே பிரதமை முடிவடைந்தால் அன்றுதான் நவராத்திரி ஆரம்பம். இது சிறப்பு விதி.
“வர்ஜநீயா ப்ரயத்னேன அமாயுக்தாது பார்த்திவ
த்வியாதி குணைர்யுக்தா பிரதிபத் சர்வகாமதா”
இதன்படி எம்முயற்சி எடுத்தாவது அமாவாசையுடன் சேர்ந்த பிரதமையை நீக்க வேண்டும். அத்துடன் துவிதீயையுடன் கூடிய பிரதமை எல்லா விருப்பங்களையும் கொடுக்கக் கூடியதாகும் என்று ஸ்கந்தபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“யதிகுர்யாத் அமாயுக்தாம் பிரதிபத் ஸ்தாபனே மம
தஸ்ய சாபாயுதம் தத்வா பஸ்ம சேஸம் கரோம்யஹம்”
அதாவது அமாவாசை சேர்ந்த பிரதமையில் எவன் எனக்கு நவராத்திரி பூஜை ஆரம்பிக்கின்றானோ அவனுக்கு சாபம் கொடுத்து அவனைச் சாம்பலாகச் செய்வேன் என்று தேவி கூறுவதாக தேவி
புராணத்தில் உள்ளது.
மேலும் தேவி புராணத்தில்,
“அமாயுக்தா ஸதா சைவ ப்ரதிபந் நிந்திதா மதா
தத்சேத் ஸதாபயேத் கும்பம் துர்பிக்சம் ஜாயதே த்ருவம்”
அமாவாசையுடன் சேர்ந்த பிரதமையில் கும்பஸ்தாபனம் செய்வதால் நிச்சயமாக நாட்டில் வறுமை ஏற்படும். அமாவாசையுடன் சேர்ந்த பிரதமை விலக்கப்பட வேண்டும்.
“அமாயுக்தா நகர்த்தவ்யா ப்ரதிபத் பூஜனே மம
முகூர்த்த மாத்ரா கர்த்தவ்யா த்விதீயாதி குணான்விதா”
அதாவது அமாவாசையுடன் சேர்ந்த பிரதமை திதியன்று எனக்கு நவராத்திரி பூஜை செய்யக்கூடாது. இப்பிரதமையானது துவிதீயையுடன் சிறிது நேரமாவது சேர்ந்திருந்தால் அத்தினத்தில் பூஜை செய்வது சிறந்தது என்பதாகும். இதிலிருந்து அமாவாசையுடன் கூடிய பிரதமையில் ஆரம்பம் கொள்வது தவறென்பதும் துவிதீயையுடன் கூடிய பிரதமை சிறப்புடையது என்பதும் தெரிகின்றது.
கடந்த வருடம் ஆந்திரா விஜயவாடாவில் நடைபெற்ற பஞ்சாங்க சதஸில் இது சம்பந்தமாக தர்மசாஸ்திர விற்பன்னர்களால் பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டு 21.-09.-2017 அன்று நவராத்திரி ஆரம்பம் அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதன்படி இந்தியாவில் வெளிவந்த ஏவிளம்பி வருட சகல திருக்கணித, வாக்கிய பஞ்சாங்கங்கள் யாவற்றிலும் 21.-09.-2017 அன்று நவராத்திரி ஆரம்பம் குறிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள ஆலயங்கள் யாவும் இவ்வாறே நவராத்திரி ஆரம்பம் செய்வதாக அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட ஆதார சுலோகங்களின் பிரகாரம் திருக்கணித பஞ்சாங்கப்படி 20-.09-.2017 அன்று பகல் 10-.59 வரையும் அமாவாசை நிற்கின்றது. மறுநாள் பிரதமை பகல் 10-.35 வரை வியாபித்திருப்பதால் 21.-09.-2017 வியாழக்கிழமை நவராத்திரி ஆரம்பம் குறித்தமை சரியாகவே உள்ளது. (ஆஸ்வீஜ சுத்தம் அன்றே போடப்பட்டுள்ளது.)
இதே நேரம் வாக்கிய பஞ்சாங்கப்படி 20.-09-.2017 புதன்கிழமை பகல் 11-.23 வரை அமாவாசையும், மறுநாள் பகல் 11-.02 வரை பிரதமையும் நிற்கின்றன. இப்பஞ்சாங்கப்படி 21.-09.-2017 வியாழக்கிழமை ஆஸ்வீஜ சுத்தப் பிரதமை குறிக்கப்பட்டிருக்கின்றது. எனவே 21-.09.-2017 அன்றே நவராத்திரி விரத ஆரம்பம் கொள்ள வேண்டுமென்பது புலனாகின்றது.
சிலர் நவராத்திரி இரவில் செய்யும் பூஜை அல்லவா. இரவில் அமாவாசை இல்லைத்தானே! ஆகவே 20-.09-.2017 புதன்கிழமை அமாவாசை முடிந்த பின் கும்பம் வைத்து நவராத்திரி ஆரம்பம் கொள்ளலாம் எனச் சொல்வார்கள். நவராத்திரி கும்பஸ்தாபனம் காலையில்தான் செய்ய வேண்டுமென்று ஆகமங்கள் கூறுகின்றன.
ஆகமப்பிரமாண முறையில் 21.-09.-2017 வியாழக்கிழமை நவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்கும்படி இந்து மக்களைக் கேட்டுக்கொள்வதுடன், தமது தவறுக்கு நியாயம் கற்பிப்பதை விடுத்து தவறை மனித நேயத்தோடு தவறென ஏற்றுக் கொண்டு மக்களை நல்வழிப்படுத்த வேண்டுமென வாக்கிய பஞ்சாங்க கர்த்தாக்களை விநயமாகக் கேட்டுக்கொள்கின்றேன்.
இவ்விடயத்தில் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களமும், இந்து மாமன்றமும் கவனமெடுத்து இந்து மக்களுக்கு சரியான விளக்கம் கொடுக்க வேண்டும்
ஜோதிடமணி பிரம்மஸ்ரீ.
சி. ஜெகதீஸ்வரசர்மா