தற்போது பெண் எழுத்தாளர்களுக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று ஜோதிகா வேதனையுடன் குறிப்பிட்டு இருக்கிறார்.
பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா, சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மகளிர் மட்டும்’. சூர்யா தயாரித்திருக்கும் இப்படம் செப்டம்பர் 15-ம் தேதி வெளியாகவுள்ளது.
‘மகளிர் மட்டும்’ படம் குறித்து ஜோதிகா கூறியிருப்பதாவது:
சாலை பயணத்தின் போது மருமகள் ஒருவர் தன்னுடைய மாமியாரையும், அவருடைய நண்பர்களையும் எப்படி பார்த்துக் கொள்கிறார் என்பது தான் கதை. இக்கதை எப்படியொரு ஆணிடமிருந்து வந்தது என எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா ஆகியோரடு இணைந்து நடிக்கும் போது, சிறிது பயமாக இருந்தது. எங்களுடைய முதல் நாள் படப்பிடிப்பு படகில் வைத்து நடைபெற்றது. அப்போது சரியாக வசனத்தைப் பேசி நடிக்க முடியவில்லை. அவர்கள் மூவருமே என்னை சகஜ நிலைக்கு திருப்பினார்கள். ஊர்வசியிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்
புல்லட் வண்டி ஓட்டி நடிக்க வேண்டிய ஒரு காட்சி இருந்தது. சூர்யா 2 நாட்கள் புல்லட் வண்டி ஓட்டுவதற்கு பயிற்சி அளித்தார். அதற்குப் பிறகு உத்திரப்பிரதேச மாநில படப்பிடிப்புக்கு ஷீபா என்ற பயற்சியாளரோடு சென்றேன். என் மகள் தியாவை பள்ளிக்கு புல்லட்டில் அழைத்து சென்று விட்ட போது அவளுக்கு பெருமையாக இருந்தது. மகன் தேவ்வுக்கு சூர்யா தான் எப்போதுமே ஹீரோ.
‘நாச்சியார்’ படத்தின் மூலமாக தேவுக்கு நாயகனாக தெரிவேன் என நம்புகிறேன். தற்போது சூர்யாவோடு தொடர்ச்சியாக உடற்பயிற்சி கூடத்துக்குச் சென்று வருகிறேன். என்னோடு நடித்த சக நடிகர்களைவிட 5 வயது இளமையாகத் தெரிவேன் என்று நம்புகிறேன்.
தற்போது பெண் எழுத்தாளர்களுக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இயக்குநர் சுதா கொங்காராவுக்கு மாதவன் வாய்ப்பு அளித்தது நல்ல விஷயம். அவர் வாய்ப்பு கொடுத்ததால் மட்டுமே ‘இறுதிச்சுற்று’ என்ற ஒரு படம் வெளிவந்து வெற்றி பெற்றது. இந்நிலை மாற வேண்டும். பெண் எழுத்தாளர்கள் யாருமே அறியாத நாயகர்கள். இவ்வாறு ஜோதிகா தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal