அவுஸ். 377/9; 72 ரன்கள் முன்னிலை

வார்னர் மற்றும் ஹேண்ட்ஸ்காம்ப் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் அவுஸ்ரேலியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் குவித்துள்ளது.

வங்காள தேசம் – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்டகாங்கில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காள தேசம் 305 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. அவுஸ்ரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 7 விக்கெட்டுக்கள் அள்ளினார்.

பின்னர் அவுஸ்ரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்திருந்தது.


சதம் அடித்த மகிழ்ச்சியில் வார்னர்

வார்னர் 88 ரன்களுடனும், ஹேண்ட்ஸ்காம்ப் 69 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஹேண்ட்ஸ்காம்ப் 82 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். சதம் அடித்த வார்னர் 123 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். வார்னர் அவுட்டாகும்போது ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்திருந்தது.


3 விக்கெட்டுக்கள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் முஷ்டாபிஜூர் ரஹ்மான்

அதன்பின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தன. கார்ட்ரைட் (18), வடே (8), மேக்ஸ்வெல் (38), அகர் (22), கம்மின்ஸ் (4) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 3-வது நாள் ஆட்ட முடிவில் அவுஸ்ரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் குவித்துள்ளது.


மேக்ஸ்வெல் கேட்சை அபாரமாக பிடித்த விக்கெட் கீப்பர் ரஹிம்

தற்போது 72 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. நாளைய 4-வது நாள் ஆட்டத்தில் கடைசி விக்கெட் ஜோடி மேலும் 28 ரன்கள் எடுத்து 100 ரன்கள் முன்னிலைப் பெற்றால், வங்காள தேசத்திற்கு சற்று பின்னடைவு ஏற்படும்.