சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய இறுதிப் போரில் குற்றங்களை இழைத்தார் என்று குற்றம்சாட்டியுள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் வெளியிட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் அவர், “இறுதிப் போரில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் இடம்பெற்றன என்பது உண்மை.
அனைத்துலக நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இறுதிப் போரில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதப் படுகொலைகளில் ஈடுபட்டார் என்று வன்னிப் படைகளின் தளபதியாகவும் பின்னர் இராணுவத் தளபதியாகவும் இருந்த ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக, வெளிநாடுகளில் போர்க்குற்ற வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜெனரல் ஜெகத் ஜயசூரிய மனிதப் படுகொலைகளில் ஈடுபட்டமைக்கு தன்னிடம் ஆதாரங்கள் உள்ளன என்று முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
எனவே, சரத் பொன்சேகா எவ்வித தயக்கமுமின்றி நீதிமன்றில் முன்னிலையாகி உண்மையை வெளிப்படுத்தவேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும்வரை சரத் பொன்சேகாவின் கருத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊக்குவிக்கும் ” என்று தெரிவித்துள்ளார்.