அனிதாவைப்போல் தற்கொலை சோகங்கள் நடக்காமல் தடுக்க எதிர்காலத்தில் புதிய திட்டங்கள் தீட்டப்படும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தனியார் டெலிவிஷனில் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் நீட் தேர்வினால் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா பற்றி உருக்கமான கருத்துக்களை வெளியிட்டார். அவர் பேசியதாவது:-
“சில கேள்விகள் விடைகாண வேண்டி நமக்காக காத்து இருக்கின்றன. எல்லா கேள்விகளுக்கும் விடைகள் உண்டு. இனி இந்த கேள்விக்கு விடையே இல்லை என்று மனம் தளர்பவர்கள் நம் பிள்ளை அனிதாவைப்போல் தன்னையே மாய்த்துக்கொள்வார்கள். இந்த தலைக்குனிவு இனி நமக்கு நிகழக்கூடாது.
அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? ஓலமிட்டு அழுதல் நமக்கு மனம் இருக்கிறது என்பதை காட்டுகிறது. ஆவன செய்வோம். இனி இது நிகழாமல் பார்ப்போம் என்று செயல்படுவதுதான் நமக்கு மூளையும் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் செயலாகும். இதற்கு மருந்து என்ன என்று என்னைக் கேட்டால் பள்ளிப்படிப்பை முடிக்காதவன் நான்.
செய்யும் ஆர்வம் இருக்கிறது. ஆற்றல் இருக்கிறதா? என்று கேட்டால் அது இருப்பவர்கள் சொல்லட்டும். நாம் செவி சாய்ப்போம். நான் செவி சாய்க்கிறேன். யாரோ ஒருவர் செவி சாய்க்க மறந்ததால்தானே நம் தலை சாய்கிறது வெட்கத்தில் நின்று. அனிதாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
இது நமது எல்லோரது வீட்டிலும் நடந்த சோகம். இருந்தாலும் அதை மறந்து இனி அதுபோன்ற சோகங்கள் நிகழாமல் தடுப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்கும் தருணம் இது. நீங்கள் யோசித்து சொல்லுங்கள் என்று என்னை கேட்காதீர்கள். நாம் யோசிப்போம். போராட வேண்டியது வந்தால் போராடுவோம். அது இன்றைக்கு, உடனே, இங்கே, இந்த மேடையில் நடக்காது. ஏனென்றால் அது எதிர்கால திட்டம். நாம் தீட்ட வேண்டிய திட்டம்.”
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.