டாக்காவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் சாஹிப் ஆல் ஹசனின் அபார பந்து வீச்சால் அவுஸ்ரேலியாவை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காள தேசம் வரலாற்று சாதனைப் படைத்துள்ளது.
அவுஸ்ரேலியா – வங்காள தேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் வங்காள தேசம் 260 ரன்களும், அவுஸ்ரேலியா 217 ரன்களும் சேர்த்தன.
43 ரன்கள் முன்னிலையுடன் வங்காள தேசம் 2-வது இன்னிங்சை தொடங்கியது. நாதன் லயன் பந்து வீச்சால் வங்காள தேசம் 221 ரன்னில் ஆல்அவுட் ஆனது. வங்காள தேசம் 264 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் அவுஸ்ரேலியாவின் வெற்றிக்கு 265 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது வங்காள தேசம்.
265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. வார்னரின் அபார ஆட்டத்தால் ஆஸ்திரேலியா நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 2 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்திருந்தது. வார்னர் 75 ரன்னுடனும், ஸ்மித் 25 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 156 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 8 விக்கெட்டுக்கள் இருந்தது.

சதம் அடித்த வார்னர்
இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. வார்னர், ஸ்மித் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். வார்னர் சிறப்பாக விளையாடி 121 பந்தில் சதம் அடித்து அசத்தினார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் சேர்த்தது.
இருவரது விளையாட்டையும் பார்க்கும்போது அவுஸ்ரேலியா வெற்றிபெறும் என்ற நிலைமை இருந்தது. அவுஸ்ரேலியாவின் ஸ்கோர் 158 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. வார்னர் 112 ரன்கள் எடுத்த நிலையில் சாஹில் அல் ஹசன் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

மேக்ஸ்வெல் க்ளீன் போல்டாகிய காட்சி
அடுத்து ஸ்மித் உடன் ஹேண்ட்ஸ்காம்ப் ஜோடி சேர்ந்தார். அவுஸ்ரேலியாவின் ஸ்கோர் 171 ரன்னாக இருக்கும்போது சாஹிப் அல் ஹசன் பந்தில் ஆட்டம் இழந்தார். ஹேண்ட்ஸ்காம்ப் 15 ரன்னிலும், மேக்ஸ்வெல் 4 ரன்னிலும், வடே 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மேக்ஸ்வெல்லை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் சாஹிப் அல் ஹசன் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
மேக்ஸ்வெல் அவுட்டாகும்போது அவுஸ்ரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்திருந்தது. கைவசம் 2 விக்கெட் இருக்கையில், 66 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் வங்காள தேசம் எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
9-வது விக்கெட்டுக்கு கம்மின்ஸ் உடன் நாதன் லயன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி விரைவாக ரன்கள் சேர்த்தது. இதனால் வங்காள தேச வீரர்கள் பதற்றம் அடைந்தனர். இறுதியில் ஸ்கோர் 228 ரன்னாக இருக்கும்போது லயன் 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
கடைசி விக்கெட்டுக்கு கம்மின்ஸ் உடன் ஹசில்வுட் ஜோடி சேர்ந்தார். கம்மின்ஸ் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து இரண்டு சிக்சர்கள் விளாசினார். இதனால் ஸ்கோர் 244 ஆக உயர்ந்தது. 21 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஹசில்வுட் ரன்ஏதும் எடுக்காத நிலையில் தைஜூல் இஸ்லாம் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். இதனால் வங்காள தேசம் 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

2-வது இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்திய சந்தோசத்தில் சாஹிப் அல் ஹசன்
இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளது. இரண்டு இன்னிங்சிலும் தலா 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதுடன், முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்த சாஹிப் அல் ஹசன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
Eelamurasu Australia Online News Portal