அவுஸ்ரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி வரலாற்றில் தனது முதலாவது வெற்றியை பங்களாதேஷ் அணி பதிவு செய்துள்ளது.
பங்களாதேஷூக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
இதற்கமைய, கடந்த 27ம் திகதி ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில், இன்று பங்களாதேஷ் அணி 20 ஓட்டங்களால் வெற்றியீட்டியதன் மூலம் இந்த இலக்கை எட்டியுள்ளது.
முன்னதாக, இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் பங்களாதேஷ் அணி 260 ஓட்டங்களையும், அவுஸ்திரேலிய அணி 217 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டன.
இதன்படி, 43 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்த பங்களாதேஷ் தனது இரண்டவது இன்னிங்சில் 221 ஓட்டங்களை விளாச, 265 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்கு அவுஸ்திரேலியாவுக்கு நிர்ணயிக்கப்பட்டது.
எனினும், அந்த அணி சார்பில் களமிறங்கிய வீரர்களில் டேவிட் வோனரைத் தவிர (112 ஓட்டங்கள்) வேறு எந்த வீரரும் அரைச் சதம் கூட பெறாது வௌியேறினர்.
எனவே, 244 ஓட்டங்களை மட்டுமே பெற்ற அவுஸ்திரேலிய அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியைத் தழுவியுள்ளது.
மேலும், இரு இன்னிங்சிலும் சிறப்பாக பந்து வீசிய ஷாகிப் அல் ஹசன் மொத்தமாக 10 விக்கெட்டுக்களை சாய்த்ததோடு, சிறப்பாட்டக்காரர் விருதையும் தன்வசப்படுத்தியுள்ளார்.