விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற போர் அனுபவத்தை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள தயாராக இருப்பதாக இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையில் மீளவும் வன்முறைகள் இடம்பெறுவதனை தடுப்பதில் படையினர் சிரத்தை காண்பித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று ஆரம்பமான பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இராணுவத்தளபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “வன்முறைகள் தற்போது சவாலான ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது. பயங்கரவாதம் உலக அளவில் வியாபித்துள்ளமை துரதிஸ்டவசமானது.
நாட்டில் மூன்று தசாப்தங்களாக நீடித்த யுத்தத்தை இலங்கை அரச படையினர் முடிவுக்குக் கொண்டு வந்து, தங்களது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றியுள்ளனர்.
இந்நிலையில், விடுதலைப் புலிகளுடனான மூன்று தசாப்தகால போர் அனுபவங்களை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாக” அவர் கூறியுள்ளார்.
அத்துடன், பிராந்திய மற்றும் ஆசியாவின் பாதுகாப்புக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், பாதுகாப்பு உறவுகளில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் இலங்கை இராணுவம் முயற்சிக்கிறது என அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில், வெளிநாடுகளைச் சேர்ந்த 15 வளவாளர்களும், 12 உள்நாட்டு வளவாளர்களும் சிறப்புரைகளை நிகழ்த்துகின்ற நிலையில், சுமார் 800 பேர் வரையில் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal