அப்பிள் இறக்குமதிக்கு வலியுறுத்திய அவுஸ்ரேலிய அமைச்சர்!

சென்னை, கோயம்பேடு சந்தையில் , பழ வியாபாரிகளுடன் அவுஸ்ரேலிய துணை பிரதமரின் உதவி அமைச்சர் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அவுஸ்ரேலிய அப்பிள் வாங்க வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அப்பிள் மற்றும் புளுபெர்ரி பழத்தை இறக்குமதி செய்யுமாறு வியாபாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் 600க்கும் மேற்பட்ட சில்லரை மற்றும் மொத்த விலை பழக்கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டிற்கு வாஷிங்டன், நியூசிலாந்து, இத்தாலி, பிரான்ஸ் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து கப்பல் மூலம், ஒரு மாதத்திற்கு 6 ஆயிரம் டன் ஆப்பிள் பழங்கள் இறக்குமதி செய்யப்படுகிறது.

கடந்த 3 ஆண்டுகளாக விலை அதிகரிப்பு காரணமாக அவுஸ்ரேலிய அப்பிளை கோயம்பேடு சந்தைக்கு இறக்குமதி செய்வதை வியாபாரிகள் நிறுத்தி உள்ளனர். இந்நிலையில் நேற்று காலையில் அவுஸ்ரேலியா நாட்டு, துணை பிரதமரின் உதவி அமைச்சர் லூப் ஹார்ட் சைகர் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் பழ வியாபாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அந்த குழுவினர், ‘‘இந்தியாவின் பல துறைகளின் செயல்பாடுகளை அவுஸ்ரேலியா பின்பற்றி வருகிறது. ஆசியாவின் சிறப்பு வாய்ந்த மார்க்கெட்டுகளில் கோயம்பேடு மார்க்கெட் ஒன்று. நீங்கள், ஆஸ்திரேலியா ஆப்பிளை மீண்டும் இறக்குமதி செய்ய வேண்டும். உங்களுக்கு அனைத்து விலை குறைப்பு, உடனடி டெலிவரி போன்ற ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்’’ என்றனர்.

அப்போது அவுஸ்ரேலிய புளுபெர்ரி வியாபாரி, ‘‘நீங்கள், புளு பெர்ரி பழத்தையும் இறக்குமதி செய்ய வேண்டும்’’ என்றனர். அதற்கு வியாபாரிகள், ‘‘புளுபெர்ரி இந்திய மதிப்பில் கிலோ ₹2 ஆயிரம் என்பதால் அதை விற்பதில் சிரமம் உள்ளது’’ என்றனர். அதற்கு ஆஸ்திரேலிய வியாபாரி, ‘‘உங்களுக்காக விலை குறைத்து தருகிறோம்’’ என்றனர். இதையடுத்து வியாபரிகளும் இறக்குமதி செய்வதாக உறுதி அளித்தனர்.

இந்த சந்திப்பில், கோயம்பேடு பழ வியாபாரிகள் சங்க தலைவர் சீனிவாசன் மற்றும் ஆப்பிள் விற்பனை மொத்த வியாபாரி மணிவண்ணன் உள்பட பழ வியாபாரிகள் கலந்துகொண்டனர். அப்போது, தமிழகத்தின் அடையாளமாக வீரர் ஒருவர் ஜல்லிக்கட்டு மாட்டை அடக்கும் ஓவியத்தை அவுஸ்ரேலிய குழுவினருக்கு பரிசாக அளித்தனர்.