அவுஸ்ரேலியாவில் இருந்து வர்த்தகம், சுற்றுலா மற்றும் முதலீட்டுத்துறை துணை மந்திரி கெய்த் பிட் தலைமையிலான குழு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த குழு இன்று இந்திய உருக்குத்துறை மந்திரி பிரேந்தர் சிங் மற்றும் இந்திய அதிகாரிகள் கொண்ட குழுவினரை சந்தித்தது.
இந்தியாவுக்கான அவுஸ்ரேலிய துணை தூதர் கிறிஸ் எல்ஸ்ராப்ட், உருக்குத்துறை செயலாளர் அருணா சர்மா மற்றும் இருநாடுகளின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த சந்திப்பின்போது, தேசிய உருக்கு கொள்கை-2017 மற்றும் மோடி தலைமையிலான இந்திய அரசால் நடைமுறைப்படுத்தப்படும் பிற முயற்சிகள் தொடர்பான விவரங்களை பிரேந்தர் சிங் பகிர்ந்துகொண்டார். இந்தியாவில் பல்வேறு வர்த்தக மேம்பாட்டு வாய்ப்புகள் தொடர்பாக இரு நாட்டு மந்திரிகளும் ஆலோசனை நடத்தினர்.
இந்தியாவில் வளர்ச்சி இலக்கு மற்றும் மேம்பாட்டு வாய்ப்புகளில் அங்கம் வகிக்க கிடைக்கும் லட்சிய வளர்ச்சி மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளில் ஒரு பகுதியாக இணைந்து செயல்படும்படி ஆஸ்திரேலிய அரசுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் பிரேந்தர் சிங் அழைப்பு விடுத்தார். உருக்கு மற்றும் சுரங்கத் துறையில் அதிக ஒத்துழைப்பு அளிக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக அவுஸ்ரேலியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதற்கான விலைகளில் உள்ள ஏற்ற இறக்கங்கள் உள்ளிட்ட பிரச்சனைகளையும் பிரேந்தர் சிங் சுட்டிக் காட்டினார்.
இயற்கை வளங்கள் முதல் தொழில்நுட்பம் வரையில் வர்த்தக உறவுகளை மேலும் விரிவுபடுத்துதல், அறிவாற்றலை பரிமாறிக்கொள்வதில் ஆஸ்திரேலிய அரசும் ஆர்வமாக இருப்பதாக கெய்த்பிட் கூறினார். இந்தியாவின் வளர்ச்சி மற்றும் வர்த்தகத்தில் பங்கேற்பதில் அவுஸ்ரேலிய முதலீட்டாளர்கள் உற்சாகமாக இருப்பதாகவும், வளங்களை திறம்பட பிரித்தெடுக்கும் பணியில் நிபுணத்துவத்தை பகிர்ந்துகொள்வதில் அவுஸ்ரேலியா மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறினார்.