சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டிய டி.ஐ.ஜி. ரூபாவின் அதிரடி, சினிமா படமாகிறது. அதில் ரூபாவாக நடிகை நயன்தாரா, அனுஷ்காவிடம் பேச்சுவாரத்தை நடத்தப்பட இருக்கிறதாம்.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய ஐ.பி.எஸ். அதிகாரியான ரூபா ஜெயிலில் சசிகலாவுக்கு சலுகைகள் அளிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். மேலும் வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த குற்றச்சாட்டை சிறைத்துறை அதிகாரிகள் மறுத்தனர்.
ஆனால் தான் கூறியது உண்மைதான் என்று ரூபா துணிச்சலாக கூறினார். மேலும் தன் மீது வழக்கு போட்டால் சந்திக்க தயாராக இருப்பதாக கூறினார்.
இந்த நிலையில் டி.ஐ.ஜி. ரூபா அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இருந்தபோதிலும் அவர் தனது நிலைப்பாட்டில் மாறாமல் உறுதியாக உள்ளார்.
இதற்கிடையே ரூபாவின் அதிரடிகளை சினிமா படமாக்க இயக்குனர் ரமேஷ் என்பவர் முடிவு செய்தார். இதற்காக ரூபா அலுவலகத்துக்கு சென்று அவரிடம் பேசினார்.
இதில் தனது அதிரடி நடவடிக்கைகளை மையமாக வைத்து சினிமா படம் தயாரிக்க ரூபா சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இயக்குனர் ரமேஷ் கூறுகையில், “இந்த படம் சிறை விதிமீறல், முறைகேடுகள் பற்றியது என்றாலும் ரூபா இதுவரை பணியாற்றிய மற்ற வழக்கு களின் விவரங்களும் இடம் பெற வாய்ப்பு இருக்கிறது.
ரூபா வேடத்தில் நடிக்க அனுஷ்கா அல்லது நயன்தாராவிடம் பேச முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.