சாம்சங் கேலக்ஸி J7 பிளஸ் புகைப்படங்கள்!

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி J7 பிளஸ் ஸ்மார்ட்போனின் லைவ் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. இம்முறை வெளியாகியுள்ள தகவல்களில் புதிய ஸ்மார்ட்போன் முன்னதாகவே வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

சீனாவின் வெய்போ தளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த ஸ்மார்ட்போன் அனைத்து கோணங்களிலும் காட்சியளிக்கிறது. புதிய கேலக்ஸி J7 பிளஸ் ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா, பிக்ஸ்பி பட்டன் உள்ளிட்டவற்றை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. புதிய கேலக்ஸி J7 பிளஸ் பிளாக் நிற மாடல் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு நிறங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெய்போவில் வெளியாகியுள்ள தகவல்களில் புதிய கேலக்ஸி J7 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் ஃபுல் எச்டி 1080×1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இத்துடன் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி, 4 ஜிபி ரேம், 16 எம்பி செல்ஃபி கேமரா, 13 எம்பி + 5 எம்பி பிரைமரி கேமரா, மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு மற்றும் 3000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும்.

முன்னதாக தாய்லாந்தில் இருந்து வெளியான தகவல்களில் டூயல் பிரைமரி கேமரா கொண்ட கேலக்ஸி J சீரிஸ் ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது. இரட்டை கேமரா கொண்ட முதல் J சீரிஸ் ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே கேலக்ஸி சி சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் டூயல் கேமரா வழங்கப்படும் என கூறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

சாம்சங் நிறுவனத்தின் இரட்டை கேமரா கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக அந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி நோட் 8 அமைந்தது. இந்த ஸ்மார்ட்போனில் 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா கொண்டிருந்தது, முதல் கேமராவில் f/1.7 அப்ரேச்சர், இரண்டாவது கேமராவில் f/2.4 அப்ரேச்சர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் செல்ஃபி எடுக்க 8 எம்பி கேமரா மற்றும் f/1.7 அப்ரேச்சர் கொண்டிருக்கிறது.