வங்காளதேசத்துக்கு சென்றுள்ள ஸ்டீவன் சுமித் தலைமையிலான அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி அந்நாட்டுடன் முதல் டெஸ்ட் போட்டியில் இன்று விளையாடுகிறது.
வங்காளதேசத்துக்கு சென்றுள்ள ஸ்டீவன் சுமித் தலைமையிலான அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி டாக்காவில் இன்று தொடங்குகிறது. இவ்விரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சந்திப்பது 11 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.
வங்காளதேச ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு உகந்தவை என்பதால் அவுஸ்ரேலியஅணி நாதன் லயன், ஆஷ்டன் அகர் ஆகிய இரு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க முடிவு செய்துள்ளது. மேக்ஸ்வெல்லும் பகுதி நேர சுழற்பந்து வீச்சு பணியை கவனிப்பார். உஸ்மான் கவாஜாவுக்கும் ஆடும் லெவன் அணியில் இடம் உண்டு என்று ஸ்டீவன் சுமித் உறுதிப்படுத்தியுள்ளார்.
முஷ்பிகுர் ரஹிம் தலைமையிலான வங்காளதேச அணி, கடந்த ஓராண்டில் இங்கிலாந்து, இலங்கை அணிகளை டெஸ்டில் வீழ்த்தி வரலாறு படைத்தது. அதே போன்று அவுஸ்ரேலியாவுக்கும் அதிர்ச்சி அளிக்க முடியும் என்று நம்புகிறது. முஷ்பிகுர் ரஹிம் கூறும் போது, ‘ஆஸ்திரேலியா மிகச்சிறந்த அணி தான். ஆனால் எங்களது சொந்த மண்ணில் அவர்களை தோற்கடிக்கக்கூடிய திறமை இருக்கிறது’ என்றார். தமிம் இக்பால், ஷகிப் அல்-ஹசன் ஆகியோருக்கு இது 50-வது டெஸ்ட் என்பது கூடுதல் சிறப்பாகும்.
இவ்விரு அணிகளும் இதுவரை மோதியுள்ள 4 டெஸ்டுகளிலும் அவுஸ்ரேலியாவே வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஐ.சி.சி. தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள அவுஸ்ரேலிய அணி இரு டெஸ்டுகளிலும் தோல்வியை தழுவினால், மோசமான நிலையாக 6-வது இடத்துக்கு தள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.