இலங்கை கடற்படை மீதான போர்க்குற்றங்களை நான் மறுக்கின்றேன். எனினும் கடற்படை சீருடையில் குற்றங்கள் இடம்பெற்றிருக்குமாயின் அவர்களை தண்டிப்பதில் மாற்றுக் கருத்து இல்லை என புதிய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா தெரிவித்தார்.
நான் ஒரு அமெரிக்க உளவாளி அல்ல. இந்த குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டார். புதிய கடற்படை தளபதியாக கடமை பொறுப்பேற்றுள்ள வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா நேற்று கடற்படை தலைமையகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பை மேற்கொண்டிருந்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அதில் மேலும் குறிப்பிடுகையில், கடற்படையில் நான் 35 ஆண்டுகள் சேவை புரிந்துள்ளேன். இந்த நாட்டுக்காகவும் நாட்டின் விடுதலைக்காகவும் என்னாலான சகல சேவையினையும் நான் எமது கடற்படையினருடன் இணைந்து முன்னெடுத்துள்ளேன். நான் கடற்படையில் இணைந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டில் பயங்கரவாத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. ஆகவே எனது கடற்படை பயணமும் கடினமானதாகவே அமைந்தது. யுத்தம் முடியும் வரையில் நான் படையில் இருந்தேன். எனினும் யுத்தத்தை விடவும் சமாதான காலமே மிகவும் கடினமான காலமாக இருந்தது என்று நான் நம்புகின்றேன். யுத்தத்தை நிறைவு செய்ததை விடவும் சமாதானத்தை பலப்படுத்தவே எமக்கு கடினமாக உள்ளது. மக்களின் மனங்களில் இன்றும் யுத்த கலவரம் மட்டுமே உள்ளது. எனவே அதையும் தாண்டிய சமாதானத்தை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.
இந்த நாட்டில் மீண்டும் ஒரு போராட்டம் ஏற்படுவதற்கான எந்தவொரு வாய்ப்பும் இல்லை என நான் தனிப்படையாக நம்புகின்றேன். இந்த நாட்டில் உள்ள சகல மக்களும் அப்பாவி மக்களேயாவர். போரில் பொதுமக்களே அதிகமாக உயிரிழந்தனர். அவர்களுக்காகவுமே இந்த நாட்டை நாம் பயங்கரவாதத்தில் இருந்து மீட்டுள்ளோம். அதேபோல் நாட்டை விட்டு நான் வெளியேறிய காலத்திலும் இலங்கை கடற்படைக்காக பல சேவைகளை செய்துள்ளேன். அமெரிக்க கடற்படை அதிகாரியாக நான் செயற்பட்ட காலத்திலும் என்னால் இலங்கை கடற்படைக்கு பல்வேறு சேவைகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களுடனான கூட்டு பாதுகாப்பு நகர்வுகளுக்காக உதவிகளை நான் முன்னெடுத்துள்ளேன். ஆனால் இவற்றை இப்போது பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. அவை இடம்பெற்று நீண்ட காலமாகிவிட்டது.
கேள்வி :- இலங்கை கடல் எல்லைக்குள் நீர்மூழ்கிக்கப்பல் நகர்வுகள் உள்ளதாக கூறப்படுகின்றது. இது நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமையுமா?
பதில்:- அயல் நாடுகளின் மூலமாக இலங்கைக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. நாம் அயல்நாட்டு கடற்படையினருடன் நட்புறவை மேற்கொண்டு வருகின்றோம். எனினும் மறுபுறம் இலங்கை கடல் பரப்பில் அயல்நாட்டு நீர்மூழ்கிக் கப்பல் பிரவேசிக்க வாய்ப்புகள் உள்ளன. அதனால் எமது பாதுகாப்பு நகர்வுகளில் எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்புகள் இல்லை. கடல் எல்லைக்குள் நுழையாத போதிலும் எல்லைகளின் மூலமாக பயணிக்க வாய்ப்புகள் உள்ளன. எனினும் இதில் அச்சுறுத்தல்கள் இல்லை.
கேள்வி:- எவன்கார்ட் நிறுவனம் தொடர்பில் கடற்படையின் செயற்பாடுகள் எவ்வாறாக உள்ளன?
பதில் :- எவன்கார்ட் கடல்பாதுகாப்பு நிறுவனம் குறித்து தவறான கருத்துக்களுடன் கடற்படையினர் தொடர்புபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால் எவன்கார்ட் நிறுவனத்துக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையில் ஒரு தொடர்பு மட்டுமே உள்ளது. கடல் பாதுகாப்பு நகர்வுகளில் ஆயுதங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மட்டுமே இலங்கை கடற்படை முன்னெடுத்தது. அதை தவிர்ந்த ஏனைய அனைத்து நடவடிக்கைகளையும் எவன்கார்ட் நிறுவனமே முன்னெடுத்தது. அதேபோல் எவன்கார்ட் நிறுவனத்தின் ஆயுதங்களை நாம் பயன்படுத்தியதில்லை. இலங்கை கடற்படையின் ஆயுதங்களையே நாம் பயன்படுத்தி கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.
அதை தவிர எவன்கார்ட் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்தது. பயணிகளை கொண்டு செல்லல், பண்டப்பரிமாற்றம், ஹோட்டல்களுக்கான உல்லாச பயணிகளை கொண்டுசெல்லல், உல்லாச களியாட்ட நடவடிக்கைகளை எல்லாம் அவர்கள் முன்னெடுத்தார்கள். இதில் எந்த செயற்பாட்டிலும் இலங்கை கடற்படை ஈடுபடவில்லை. நாம் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தகுதியான நபர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சோமாலிய எல்லையில் கூட எமது பாதுகாப்பு செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. எனினும் இப்போது எவன்கார்ட் செயற்பாடுகள் இல்லை.
கேள்வி :- கடற்படை மீதான போர்க்குற்றம் தொடர்பில் கடற்படை தளபதியாக உங்களின் நிலைப்பாடு என்ன?
பதில் :- இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் முன்வைக்கப்பட்ட காரணிகளில் உண்மை இல்லை. இலங்கை கடற்படையை பொறுத்தவரை மிகவும் ஒழுக்கமான படையாகவே நாம் கருதுகின்றோம்.
எனினும் கடற்படை சீருடையினை அணிந்துகொண்டு கடமைக்காலத்தில் ஏதேனும் குற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்றால் அவை நிரூபிக்கக்கூடிய வகையில் இருக்குமாயின் யாராக இருப்பினும் அவர்களுக்கு தண்டனை உண்டு. அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. எனினும் பொய்யாக குற்றங்களை சுமத்தி எவரையும் தண்டிக்க முடியாது. பாதுகாப்பு வீரர் ஒருவன் கொலையாளி அல்ல, கொலையாளி ஒருவன் பாதுகாப்பு வீரனும் அல்ல. இராணுவ தளபதி இந்த கருத்தை கூறுவார். இந்த வாக்கியத்தில் நானும் முழுமையாக உடன்படுகின்றேன்.
கேள்வி :- புலிகளின் படகுகளை அழித்த பின்னர் உங்களுக்கான அச்சுறுத்தல்கள் ஏற்படவில்லையா?
பதில் :- புலிகளின் ஆயுதப் படகுகள் அழிக்கப்பட்டதன் பின்னணியில் எனது தலைமைத்துவம் இருந்தது. புலிகளின் 10 அதி நவீன ஆயுதக் கப்பல்களை நாம் அழித்த போது இந்த செய்தி வெளியில் வரவில்லை. ஆனால் அவர்களின் படகுகளை அழித்தமையே புலிகளின் கடற்படை பலத்தை குறைக்க பிரதான காரணமாக அமைந்தது. இந்த செயற்பாட்டில் எனது பெயர் வந்திருக்குமாயின் எனக்கு மட்டுமல்ல எனது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தலாக இருந்திருக்கும். எனது குடும்பத்தினர் தனிமையில் கண்டியில் இருந்தனர். நான் முழு நேரமாக கடற்படையில் என்னை ஈடுபடுத்தி இருந்த காரணத்தினால் அவர்களுக்கு பாதுகாப்பு குறைவாகவே இருந்தது. இந்நிலையில் எம்மால் இந்த செயற்பாடுகள் இடம்பெற்றன என்பது தெரிய வந்திருக்குமாயின் எமக்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கும். எனினும் எனது பெயர் வெளியில் வரவில்லை. நான் மட்டும் அல்ல என்னைப்போல் பலர் யாரென்று தெரியாத நிலைமைகள் இன்றும் உள்ளனர். என்னுடன் கடமையாற்றிய பலர் இன்றும் அடையாளம் காட்டிக்கொள்ளாது சேவையாற்றி வருகின்றனர். இன்றும் எமக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனினும் நாம் எம்மை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய நிலையில் உள்ளோம். பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாத காரணத்தினால் எமக்கு அழுத்தங்கள் இல்லை.
கேள்வி:- யோஷித்த ராஜபக் ஷ இன்னும் கடற்படையில் உள்ளாரா ?
பதில் :- யோஷித்த ராஜபக் ஷ தற்போது கடற்படையில் இல்லை. அவருக்கான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. ஆகவே அது வரையில் அவரை சேவையில் இருந்து இடை நிறுத்தியுள்ளோம். விசாரணைகள் முடியும் வரையில் அவர் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். விசாரணைகளின் பின்னர் தீர்ப்புகளை பொறுத்து அவரை மீண்டும் இணைப்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படும். இந்த விசாரணைகளின் பூரண தகவல்கள் தொடர்பில் இன்னும் நான் அவதானிக்கவில்லை. எனினும் யோஷித்த ராஜபக் ஷ தொடர்பில் பாரிய குற்றங்கள் இல்லை. அவர் கடமையில் நேர்த்தியில்லாது அதிக விடுமுறைகளை எடுத்துள்ளார். தனிப்பட்ட வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார். இந்த விடயங்களை பாரிய குற்றமாக கருத முடியாது. இவ்வாறு பலர் உள்ளனர். அவர்களுக்கான கடற்படை சட்டம் நடைமுறையில் உள்ளது. அதற்கமைய தண்டனை வழங்கப்படும்.
கேள்வி :- நீங்கள் ஒரு உளவாளி என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர், இது தொடர்பில் உங்களின் பதில் என்ன ?
பதில் :- என்னை ஒரு அமெரிக்க உளவாளியாக சில அரசியல் வாதிகள் கூறுகின்றமையை நான் முழுமையாக மறுக்கிறேன். நான் ஒரு உளவாளி அல்ல. நான் இந்த நாட்டுக்காகவும் எமது நாடு என்ற உணர்விலும் 35 ஆண்டுகள் சேவை செய்தவன். நான் அமெரிக்க கடற்படையில் இணைந்த போதிலும் என்னால் இலங்கை கடற்படைக்கு பல்வேறு சேவைகள் ஆற்றப்பட்டுள்ளன. எமது கடற்படையினரை உறுதிபடுத்தவும், அவர்களுக்கான பயிற்சிகளை வழங்கவும் நான் அமெரிக்க கடற்படையின் உதவியுடன் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளேன்.
அதேபோல் உளவாளி என்றாலும் கூட அது இலங்கைக்கு நன்மையாகவே அமையும். அதன் மூலமாக இலங்கைக்கு தேவையான பல்வேறு காரியங்களை சாதிக்க முடியும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால் நான் அமெரிக்க உளவாளி அல்ல என்றார்.