விபத்துக்குள்ளான அமெரிக்கப் போர்க்கப்பலில் காணாமற்போன மாலுமிகளைத் தேடி மீட்கும் பணிகளுக்கான தேடல் பகுதி விரிவுபடுத்தப்படுள்ளதாக சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது. தேடல் பகுதி 2.620 சதுர கிலோமீட்டரிலிருந்து 5,524 சதுர கிலோமீட்டருக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தேடல் பணிகளில் அவுஸ்ரேலியாவும் சேர்ந்து கொண்டுள்ளது.
முக்கிய தேடல் பகுதியில் சிங்கப்பூர், அமெரிக்கா ஆகியவை தேடல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மலேசியா, இந்தோனேசியா, அவுஸ்ரேலியா ஆகியவை அதைச் சுற்றிய பகுதிகளில் தேடல் பணிகளை நடத்தி வருகின்றன.
வர்த்தகக் கப்பலுடன் விபத்துக்குள்ளான அமெரிக்கப் போர்க்கப்பலில் 10 பேர் காணாமற்போயினர், ஐவர் காயமடைந்தனர். மூன்று நாட்களாகத் தொடரும் மீட்புப் பணிகளில் மாண்டவர்களின் உடற்பாகங்கள் சில கண்டெடுக்கப்படுள்ளன.
சிங்கப்பூர் இதுவரை 300க்கும் மேற்பட்டவர்களைத் தேடல் பணிகளில் அமர்த்தியுள்ளது. சிங்கப்பூர் ஆயுதப் படையும் கடலோரக் காவல் படையும் தேடி மீட்கும் கப்பல்களை அனுப்பியுள்ளன. சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையமும் அந்தக் கப்பல்களுடன் முக்குளிப்புக் குழுவை அனுப்பியுள்ளது.
தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் ஜேம்ஸ் மாட்டிசுக்கு இரங்கல் கடித்தை அனுப்பியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தமது இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக டாக்டர் இங் தமது கடிதத்தில் குறிப்பிட்டார். தற்காப்பு அமைச்சும் சிங்கப்பூர் ஆயுதப் படையும் அமெரிக்கக் கடற்படைக்கு உதவத் தயாராய் உள்ளதாகத் தமது கடிதத்தில் டாக்டர் இங் கூறியுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal