புதுமுகங்கள் அதிகமாக வருவதால் பட வாய்ப்புகள் குறைந்து விட்டதா? என்பதற்கு நடிகைகள் தமன்னா, ஹன்சிகா ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.
தமன்னாவுக்கு தமிழில் படங்கள் இல்லை. தெலுங்கில் இளம் கதாநாயகன் சந்தீப் கிஷனுடன் மட்டும் ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். பாகுபலி படம் மற்றும் அதன் இரண்டாம் பாகத்தில் கஷ்டப்பட்டு நடித்து இருந்தார். குதிரை சவாரி, வாள் சண்டை பயிற்சிகளும் எடுத்து நடித்தார்.
பாகுபலி முதல் பாகத்தில் தமன்னாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் இரண்டாம் பாகத்தில் அவரது கதாபாத்திரம் பேசப்படவில்லை. இதனால் உழைப்பெல்லாம் வீணான விரக்தியில் இருக்கிறார். புதுமுக நடிகைகள் வரவால் டைரக்டர்கள் புறக்கணிக்கிறார்களா? என்று தமன்னாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
“புதுமுக நடிகைகளால் எனது சினிமா வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடுகிறேன். எத்தனை படங்களில் நடித்தோம் என்பதைவிட நல்ல கதையம்சம் உள்ள படங்களில் இருக்கிறோமா என்பதுதான் முக்கியம். ஒரு நடிகைக்கு சிறந்த ‘இமேஜ்’ கிடைக்க வேண்டும் என்றால் மைல்கல் மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும்.
அந்த மாதிரி படங்கள் அமைந்தால் பெரிய உயரத்துக்கு போய் விடலாம். வருகிற படங்களில் எல்லாம் நடித்தால் செல்வாக்கை இழந்து விடுவார்கள். பாகுபலிக்கு பிறகு புதிய பட வாய்ப்புகள் வரவில்லை என்பது உண்மைதான். இப்போது நான் வருகிற படவாய்ப்புகளையெல்லாம் ஒப்புக்கொள்வது இல்லை. கதாபாத்திரம் எனது மனதுக்கு பிடித்து இருந்தால் மட்டுமே நடிக்கிறேன்.” இவ்வாறு தமன்னா கூறினார்.
ஹன்சிகாவிடம் உங்களுக்கு புதிய படவாய்ப்புகள் குறைந்து விட்டதா? என்று கேட்டபோது அவர் கூறியதாவது:-
“நான் சினிமாவில் அறிமுகமானதில் இருந்தே ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்கின்றன. தெலுங்கில் படங்கள் குறையும்போது தமிழில் வாய்ப்புகள் வரும். தமிழ் பட உலகில் ‘டாப் 5’ கதாநாயகிகளில் நானும் ஒருவராக இருந்தேன். நடிகைகளுக்கு மார்க்கெட் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. ஏற்றம் இறக்கத்தையும் வெற்றி தோல்வியையும் எல்லா நடிகைகளுமே எதிர்கொள்ளத்தான் வேண்டும்.
எனக்கு சினிமா வாழ்க்கை திருப்தியாகவே போய்க்கொண்டு இருக்கிறது.”இவ்வாறு ஹன்சிகா கூறினார்.