அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சிட்னி நகர சபைக்கான தேர்தலில் தமிழர் தாயகத்தை பூர்வீகமாகக் கொண்ட ஈழத் தமிழ் அகதியான சுஜன் செல்வன் போட்டியிடுகின்றார்.
அரசியல் தஞ்சம் கோரும் ஈழத் தமிழர்களுக்கு அவுஸ்திரேலியாவின் தற்போதைய அரசியல் சூழ்நிலை அவ்வளவு சாதகமானதாக இல்லையென கூறும் முன்னாள் அகதியும், தற்போதைய அவுஸ்திரேலிய பிரஜையுமான சுஜன் செல்வன் எனினும், அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோரும் ஈழத் தமிழர்கள் அந்நாட்டு சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு நேர்காணலின்போது சரியான தகவல்களை வழங்குவதன் ஊடாக தஞ்சக்கோரிக்கை அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள முடியுமென நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீலங்காவில் நடைபெற்ற யுத்தம் காரணமாக உயிர் பாதுகாப்புத் தேடி கடந்த 2000ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறிய, ஈழத் தமிழரான சுஜன் செல்வன் அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரியிருந்தார்.
இதற்கமைய அரசியல் தஞ்சக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் சுஜன் செல்வன் கடந்த 2005ஆம் ஆண்டு அந்நாட்டின் குடியுரிமையை பெற்றுக்கொண்டுள்ளார்.
எனினும் அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரி வரும் ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு குரல்கொடுத்துவரும் பல்வேறு அமைப்புக்களுடன் இணைந்து சுஜன் செல்வன் தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றார்.
இந்த நிலையில் கடந்த 2015ஆம் பிராந்திய சபைகளுக்கான தேர்தலில் போட்டியிட்ட சுஜன், இந்த வருடம் நடைபெறும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் களமிறங்குகின்றார்.
நடைபெறவுள்ள தேர்தலில் தாம் வெற்றிபெற்றாலும் ஈழத் தமிழர்களின் அகதி அந்தஸ்து கோரிக்கை தொடர்பில் பெரிதாக எதனையும் செய்ய முடியாது என்பதை ஏற்றுக்கொள்ளும் சுஜன் செல்வன், எனினும் தனிப்பட்ட ரீதியில் உதவமுடியுமென சுட்டிக்காட்டுகின்றார்.
Eelamurasu Australia Online News Portal