மூன்று வாரங்களுக்கு முன்பு காணாமல் போன 25 வயது ரேடியோலஜி மாணவி லிசா தெரிஸ், அமெரிக்காவின் அலபாமா காட்டில் கண்டுபிடிக்கப்பட்டார். “நான் அந்த வழியாக கார் ஓட்டிக்கொண்டு வந்தேன். அப்போது புதர்களுக்குப் பின்னால் ஏதோ விலங்கு அசைவதுபோல் தோன்றியது. மானாக இருக்கும் என்று நினைத்து, ஆர்வமாகத் தேடிச் சென்றேன்.
அங்கே ஒரு பெண் அழுக்காகவும் ஆடையின்றியும் பரிதாபமாக நின்றுகொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன் ஓட ஆரம்பித்தார். அவரைத் துரத்திச் சென்று பிடித்தேன். மெலிந்த உடல் முழுவதும் பூச்சிக்கடிகள். சிக்குப் பிடித்த தலைமுடி. நகங்களில் அழுக்கு. மிரட்சியான பார்வை. நீண்ட காலம் காட்டில் வசித்தவராகத் தெரிந்தார்.
அவர் யார், ஏன் இங்கு வசிக்கிறார் என்ற கேள்விகளுக்குப் பதில் அளிக்கவில்லை. பெர்ரிகளையும் அழுக்குத் தண்ணீரையும் குடித்து வாழ்ந்து வருவதாகச் சொன்னவர், தன்னை விட்டுவிடும்படி கெஞ்சினார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. குடிப்பதற்கு நல்ல தண்ணீர் தருவதாகச் சொல்லி கார் அருகே அழைத்துவந்தேன்.
சாலையில் ஒரு பெண்ணைக் கண்டுபிடித்திருக்கிறேன் என்று காவல் துறைக்கும் தகவல் கொடுத்தேன். காவலர்கள் வந்தவுடன் அவரை ஒப்படைத்துவிட்டேன். அந்தப் பெண் எதையும் கூற மறுத்துவிட்டார். 3 வாரங்களுக்கு முன்பு காணாமல் போனவர் குறித்துப் புகார் வந்திருந்ததால், காவல் துறையினர் உடனே அவர் பெயரையும் முகவரியையும் கண்டுபிடித்துவிட்டனர்” என்கிறார் ஜூடி கார்னர்.
“நாங்கள் ஏற்கெனவே லிசா காணாமல் போனது குறித்து, சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்திருந்தோம். அவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் கொள்ளையடித்துவிட்டு வரும் வழியில் லிசா அந்த வண்டியில் லிஃப்ட் கேட்டு ஏறிக்கொண்டார்.
கொள்ளையடித்த பொருட்களைப் பார்த்தவுடன் அவருக்குச் சந்தேகம் வந்துவிட்டது. உடனே வண்டியை நிறுத்தச் சொன்னார். நாங்கள் நிறுத்தவில்லை. திடீரென்று கார் கதவைத் திறந்துகொண்டு குதித்து, காட்டுக்குள் ஓடிவிட்டார். நாங்கள் துரத்திச் சென்றபோதும் எங்களால் அவரைப் பிடிக்க முடியவில்லை என்கிறார்கள் அந்தக் கொள்ளையர்கள். லிசாவுக்கு அந்தக் காட்டுப் பகுதி பரிச்சயமில்லாததால், இருவர் துரத்தும்போது வழி தவறி காட்டுக்குள் சென்றுவிட்டார்.
அதனால் அவரால் உடனே வெளிவர முடியவில்லை என்று நினைக்கிறோம். லிசா பேசினால்தான் உண்மை தெரியும். அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துவிட்டோம். அவரது குடும்பத்துக்கும் தகவல் கொடுத்துவிட்டோம். நான் 15 ஆண்டுகளாக இந்தப் பகுதியில்தான் வசிக்கிறேன். இதுபோன்ற ஒரு சம்பவத்தைப் பார்த்ததில்லை. லிசா இத்தனை நாட்கள் இந்தக் காட்டில் எப்படித் தாக்குப் பிடித்தார் என்பதும் அதிசயமாக இருக்கிறது” என்கிறார் காவல்துறை அதிகாரி. “லிசாவுக்கு மோசமான பாதிப்பு ஏதும் இல்லை என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர்.
உடல் முழுவதும் பூச்சிக்கடிகள். 22 கிலோ எடை குறைந்திருக்கிறார். மனதாலும் உடலாலும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார். அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பார், தைரியமானவர், எப்போதும் ஜோக் சொல்லி எல்லோரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருப்பார். லிசா மீண்டு வருவதற்குச் சில வாரங்கள் ஆகும்” என்கிறார் அக்கா எலிசபெத்.
லிசாவுக்கு நேர்ந்த துயரத்தை நினைத்தால் திகிலாக இருக்கிறது!