19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை! – இந்தியா – அவுஸ்ரேலியா மோதல்!

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியாவுடன் அவுஸ்ரேலியா மோதவுள்ளது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 13-ம் தேதி முதல் பிப்ரவரி 3-ம் தேதி வரை நியூஸிலாந்தில் நடக்கவுள்ளது. இப்போட்டியில் 16 அணிகள் கலந்துகொள்கின்றன.

இதில் இந்தியா இடம்பெற்றுள்ள ‘பி’ பிரிவில் அவுஸ்ரேலியா, ஜிம்பாப்வே, பாப்புவா நியூ கினியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. ஜனவரி 13-ம் தேதி நடக்கும் முதல் போட்டியில்அவுஸ்ரேலிய அணியை எதிர்த்து இந்தியா ஆடும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த உலகக் கோப்பை போட்டிகளுக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்கா மற்றும் கென்ய அணிகளுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா ஆடவுள்ளது.

நடப்பு சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணி, இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. அந்த அணியுடன் நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, கென்யா ஆகிய அணிகளும் இப்பிரிவில் இடம்பெற்றுள்ளன.

மேலும் ‘சி’ பிரிவில் வங்கதேசம், கனடா, இங்கிலாந்து, நமீபியா ஆகிய அணிகளும், ‘டி’ பிரிவில் பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள், சூப்பர் லீக் பிரிவுக்கு தகுதிபெறும்.

இத்தொடரைக் குறித்து நிருபர்களிடம் கூறிய ஐசிசி நிர்வாகி கிறிஸ் டெட்லி, “இளம் வீரர்களிடையே ஒளிந்துகிடக்கும் திறமையை கண்டறிந்து, அதை மேம்படுத்த இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மிகவும் உதவுகிறது. கடந்த காலங்களில் இதுபோன்ற போட்டிகளின் மூலம் பல இளம் வீரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேபோல் இந்த ஆண்டும் பல இளம் வீரர்களை அடையாளம் காண இத்தொடர் மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

இத்தொடரில் முதல் முறையாகப் பங்கேற்கும் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் நவீன் அல் ஹக் கூறும்போது, “உலகக் கோப்பை போட்டியில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். மற்ற அணிகளைப் போலவே எங்கள் இட்சியமும் உலகக் கோப்பையை வெல்வதுதான். அதற்காக கடுமையாக முயற்சிப்போம்” என்றார் – ஐஏஎன்எஸ்