இந்தியாவில் இயங்கி வரும் 21 ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பின்பற்றி வரும் பாதுகாப்பு வழிமுறைகளை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்களி்ன் பாதுகாப்பை உறுதி செய்ய ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் பாதுகாப்பு வழிமுறைகளை தெரிவிக்க மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் 21 ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையே நிலவி வரும் பதற்றமான சூழலில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
21 ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்களும், ஒப்போ. விவோ, ஜியோணி, சியோமி மற்றும் லெனோவோ போன்ற சீன நிறுவனங்கள் மற்றும் மைக்ரோமேக்ஸ் போன்ற இந்திய நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு ஸ்மார்ட்போன் நிறுவனமும் தங்களது சாதனங்களை உள்நாட்டில் தயாரித்தாலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தாலும் அவற்றின் பாதுகாப்பு வழிமுறைகளுக்கு பின்பற்றப்படும் நடைமுறைகளை தெரிவிக்க வேண்டும்.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையின் உத்தரவில் இடம்பெற்றுள்ள ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அனைத்து தகவல்களையும் ஆகஸ்டு 28-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸ்அப் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்களையும் இந்தியாவில் சொந்தமாக சர்வெர்களை உருவாக்க உத்தரவிடுவது குறித்து மத்திய அரசு ஆலோசணை நடத்தி வருகிறது.
ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் குறுந்தகவல்கள் மற்றும் காண்டாக்ட் லிஸ்ட் உள்ளிட்டவை திருடப்பட்டு அவை அனைத்தும் ரிமோட் சர்வெர்களில் சேமித்து வைக்கப்படுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து மத்திய அரசு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதுபோன்ற தகவல் திருட்டு சம்பவங்களை சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் தவிரக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் அல்லது மொபைல் போன்களின் தகவல்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் அல்லது மொபைல் போன்களில் வாடிக்கையாளர்களின் விலை மதிப்பில்லா தகவல்கள் அடங்கியுள்ளது என மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை உத்தரவின் படி சாதனத்தின் தகவல்கள், அவை பயன்படுத்தும் இயங்குதளம், அதில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள செயலிகள் மற்றும் அவற்றுடன் வழங்கப்படும் டஃபால்ட் பிரவுசர் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். பாதுகாப்பு அம்சங்களில் குறைவைக்கும் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் 50 சதவிகித பங்குகளை வைத்திருக்கும் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு மத்திய அரசின் புதிய உத்தரவு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் காமியோ மற்றும் வோடோ போன்ற புதுவரவு ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும். முன்னதாக ஹூவாய் மற்றும் இசட்.டி.இ. போன்ற நிறுவனங்கள் பயன்படுத்தும் டெலிகாம் உபகரணங்கள் பாதுகப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தின.