கொச்சிக்கு வருகை புரிந்த சன்னிலியோனை பார்க்க திரண்ட கூட்டத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தடுப்பு கட்டைகளை உடைத்துக் கொண்டு ரசிகர்கள் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது.
நடிகை சன்னிலியோன் ஏராளமான ஆபாச படங்களில் நடித்து உள்ளவர். வெளிநாட்டைச் சேர்ந்தவரான இவர் சமீபத்தில் இந்தியாவுக்கு வந்து, இந்தி சினிமாக்களிலும் நடித்தார். ‘ஜிஸ்ம்-2’ என்ற என்ற இந்திப்படத்தில் நடிக்கத் தொடங்கிய இவருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்தது.
இதனால் அவர் தொடர்ந்து பல இந்தி படங்களில் நடித்து புகழ் பெற்றார். மேலும் தமிழில் `வடகறி’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதிலும் சன்னிலியோன் இடம்பிடித்தார்.
இதன்பிறகு நடிகை சன்னிலியோன் இந்தியாவில் எந்த பகுதிக்கு சென்றாலும் அவரை ரசிகர்கள் சுலபமாக அடையாளம் கண்டுகொள்ளும் நிலை ஏற்பட்டுவிட்டது. இந்திய நடிகைகளை பார்க்கக்கூடும் ரசிகர்களை விட அதிக கூட்டம் சன்னி லியோனுக்கு கூட தொடங்கிவிட்டது.
இதற்கு எல்லாம் சிகரம் வைத்தார்போல கேரள ரசிகர்கள் சன்னிலியோனை பார்க்க திரண்டதால் கொச்சியில் 2 மணி நேரத்திற்கு மேல் வாகன போக்குவரத்தே ஸ்தம்பித்துவிட்டது.
பொதுவாக கேரளாவில் நடிகர், நடிகைகளுக்கு அங்குள்ளவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். தமிழ், தெலுங்கு பட உலகில் இருப்பதுபோல ரசிகர் மன்றங்கள், கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம், நடிகைகளுக்கு கோவில் கட்டுவது என்பதெல்லாம் அங்கு கிடையாது. இந்த நிலையில் சன்னிலியோனை பார்க்க திரண்ட ரசிகர்கள் கூட்டம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொச்சி எம்.ஜி. சாலையில் ஒரு செல்போன் நிறுவன ஷோரூமை திறந்து வைப்பதற்காக சன்னி லியோன் வந்தபோது தான் கேரளாவில் இந்த கூட்டம் கூடி உள்ளது. இதனால் அவரது கார் அந்த சாலையில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. சன்னிலியோனும் உடனடியாக காரில் இருந்து இறங்கி ஷோரூமுக்குள் செல்ல முடியவில்லை. குறைந்த அளவு போலீஸ் பாதுகாப்பே போடப்பட்டு இருந்ததால் ரசிகர்கள் தடுப்பு கட்டைகளை உடைத்துக் கொண்டு காரை சூழ்ந்து கொண்டனர். போலீசார் கடும் சிரமத்திற்கு பிறகே சன்னிலியோனை அழைத்துச் செல்ல முடிந்தது.
அதன்பிறகு சன்னி லியோன் ரசிகர்களை பார்த்து உற்சாகமாக கை அசைத்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இதுபற்றி சன்னிலியோன் கூறும்போது ‘கேரள ரசிகர்களின் அன்பை பார்த்து நான் மெய்மறந்துவிட்டேன். இவ்வளவு பேர் என்னை பார்ப்பதற்காக திரண்டதை என்னால் நம்ப முடியவில்லை. இவர்களின் அன்புக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லை என்றார்.
சன்னிலியோன் வருகையால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது தொடர்பாக அந்த செல்போன் நிறுவன உரிமையாளர், ஊழியர்கள் உள்பட 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.