ராஜீவ்காந்தி கொலை தொடபுடைய முருகன், இன்று ஜீவசமாதி அடையப் போவதாக கூறியுள்ள நிலையில் அவரை சிறையில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி கொலையாளி முருகன், இன்று(18) ஜீவசமாதி அடையப் போவதாக கூறியுள்ள நிலையில் அவரை ஜெயில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை கைதிகளாக முருகன், அவரது மனைவி நளினி, பேரறிவாளன் ஆகியோர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் கடந்த 26 ஆண்டுகளாக ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். முருகன் கடந்த சில மாதங்களாகவே காவி உடை அணிந்து ஜடாமுடி தரித்து முழுக்க முழுக்க சாமியார் போல் மாறியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.க்கு முருகன் ஒரு கடிதம் அனுப்பினார். அதில் சிறை வாழ்க்கை தொடர எனக்கு விருப்பமில்லை. எனக்கு விடுதலை கிடக்கும் என்ற நம்பிக்கையும் இல்லை. இதனால் ஆகஸ்ட் 18-ம் திகதி சிறையிலேயே தான் ஜீவசமாதி அடைய உள்ளதாகவும், அதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து, அன்று முதல் தினமும் ஒருவேளை மட்டும் உணவு சாப்பிட்டு வந்த அவர் மற்ற நேரங்களில் பழங்களை சாப்பிட்டு வந்தார்.
இம்மாதம் தொடக்கத்தில் இருந்து 3 வேளையும் வெறும் பழங்கள் மட்டும் சாப்பிட்டு வந்ததாக ஜெயில் வட்டாரத்தில் கூறப்பட்டது.
இந்த நிலையில் முருகன் ஜீவசமாதி அடைய போவதாக அளித்த நாளான இன்று காலை கண்விழித்த முருகன் யாரிடமும் பேசாமல் அமைதியாக ஜெயிலில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்றார். அங்கு தரையில் அமர்ந்து நீண்ட நேரம் சாமி தரிசனம் செய்தார். அவரது செயல்பாடுகளை சிறைதுறை அதிகாரிகள் கண்காணித்தனர்.
கோவிலில் இருந்து முருகன் சாப்பிட வரவில்லை. சாப்பிட மறுத்து ஜீவசமாதிக்கான செயல்பாடுகளில் முருகன் இறங்கினார். ஜெயில் அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் முருகன் சமாதானமாகவில்லை. முருகன் சாப்பிடவில்லையென்றாலும் ஜீவசமாதி நடவடிக்கையை கைவிட மறுத்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறையில் ஜீவசமாதி அடைவது என்பது முடியாத விஷயம். இருந்தபோதும், சிறையில் உள்ள முருகனை மிக தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்று சிறைத் துறை காவல் துறையினர் தெரிவித்தனர்.
ஒருவர் தான் நினைத்த வாழ்வை நல்லபடியாக வாழ்ந்த பின்னர் போதும் இந்த உலக வாழ்க்கை என முடிவெடுத்து தனக்கான சமாதியை தானே அமைத்துக் கொண்டு, அதன் உள்ளே அமர்ந்து உணவு நீர் அருந்தாமல் உயிர் துறப்பதே ஜீவசமாதியாகும்.