உப்பு மற்றும் குளிர் திரவங்களின் வடிவில் உபரி மின் சக்தியை சேமித்து, வேண்டும்போது பயன்படுத்தும் ஒரு பழைய தொழில்நுட்பத்தை கையிலெடுத்திருக்கிறது, ‘மால்ட்டா!’ இது, கூகுளின் பரிசோதனை நிறுவனங்களுள் ஒன்று.கூகுளின் தாய் நிறுவனமான, ‘ஆல்பபெட்’ பல ஆராய்ச்சி நிறுவனங்களை உள்ளடக்கியது.
அதில் ஒன்று தான், ‘கூகுள் எக்ஸ்!’ இது, பல தொழில்நுட்பங்களை பரிசோதித்து வருகிறது. கூகுளின் தானோட்டி கார்கள் முதல், கூகுள் கிளாஸ் வரை பல புதுமைகள் இதே கூகுள் எக்சிலிருந்து வெளிவந்தவை.மால்ட்டாவின் தொழில்நுட்பம், இரண்டு, மூன்று பகுதிகளைக் கொண்டது.
மின்சாரத்தை வெப்பமாக மாற்றி உப்புக் கலனில் சேமிக்கும் பகுதி, குளிர் சக்தியாக மாற்றி ஹைட்ரோகார்பன் கலனில் சேமிக்கும் பகுதி, காற்றிலிருந்து மின்சாரத்தை தயாரிக்கும், ‘டர்பைன்’ பகுதி. சேமிக்கப்பட்ட வெப்பம் மற்றும் குளிர் சக்திகள் டர்பைன் பகுதிக்கு வரும்போது காற்றழுத்தம் உருவாகி டர்பைன் வேகமாக சுழல, மின்சாரம் உற்பத்தியாகிறது.
இந்த தொழில்நுட்பம் பல அளவுகளில், உலகின் பகுதிகளில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், அவற்றிலுள்ள ஆபத்துகளை நீக்கி, பாதுகாப்பை அதிகரித்திருப்பதும், விலை குறைவான பொருட்களை பயன்படுத்துவதும், பராமரிப்பு செலவுகளை குறித்திருப்பதும் தான் மால்ட்டாவின் ஆராய்ச்சி செய்திருக்கும் மாயங்கள். தவிர, இதை வீட்டுக்கும், தொழிற்சாலைகளுக்கும் பயன்படுத்தும் பல அளவுகளில் கருவிகளை செய்ய முடிகிற வகையில் மால்ட்டா வடிவமைத்திருக்கிறது.
இதுவரை ரகசியமான பரிசோதனையாக இருந்த மால்ட்டா, விரைவில், ‘சீமன்ஸ், ஜெனரல் எலக்ட்ரிக்’ போன்ற மின் உற்பத்தி கருவிகளை தயாரிக்கும் நிறுவனங்களுடன் தொழில்நுட்ப கூட்டு ஒப்பந்தம் போட தயாராகியிருப்பதால், ஊடகங்களில் செய்தி கசிந்திருக்கிறது.