எலும்பு சிகிச்சைக்கு ‘3டி பிரின்டர்!’

சிறு வயதினருக்கு இடுப்போடு இணைந்த தொடை எலும்பு பகுதியில் ஏற்படும் குறைபாட்டை சரி செய்ய, சிக்கலான அறுவை சிகிச்சை தேவை. இச்சிகிச்சைக்கு ஆகும் நேரத்தைக் குறைக்க, முப்பரிமாண அச்சியந்திரத்தை பயன்படுத்தலாம் என்கின்றனர், அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தினர்.

அப்பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர் வித்யாதர் உபாசனியுடன் இணைந்து, தொடை எலும்பு குறைபாடுள்ள, 10 சிறுவர்களில் ஐந்து பேருக்கு, ‘சி.டி., ஸ்கேன்’களை எடுத்து, அதே மாதிரி தொடை எலும்புகளை முப்பரிமாண அச்சியந்திரத்தில் செயற்கையாக வார்த்தெடுத்தனர்.

அந்த மாதிரி எலும்புகளை வைத்து, வித்யாதர் ஒத்திகை பார்த்த பிறகு, அசல் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்தபோது, சிகிச்சைக்கான நேரத்தில், 25 சதவீதத்தை குறைக்க முடிந்தது. இந்த மாதிரி எதுவும் எடுக்காமல், ஐந்து சிறுவர்களுக்கு சிகிச்சை செய்தபோது, அதிக நேரம் பிடித்தது.

சிறுவர்கள் அறுவை சிகிச்சை அறையில் இருக்க வேண்டிய நேரத்தில் முக்கால் மணி நேரம் வரை குறைப்பதால், முப்பரிமாண அச்சு மாதிரியில் ஒத்திகை பார்க்கும் முறையை எலும்பு மருத்துவர்கள் மெச்சியுள்ளனர். மருத்துவத் துறையில், பல், எலும்புகள் போன்ற உடலின் பாகங்களைக் கூட செய்து தரும் வசதிகள் முப்பரிமாண அச்சியந்திரத்தில் வந்துவிட்டன.

இருந்தாலும், மருத்துவர்கள் ஒத்திகை பார்த்து, பயிற்சி பெறுவதற்கும் முப்பரிமாண அச்சியந்திர தொழில்நுட்பம் உதவுவது ஆச்சரியமான விஷயம் தான்.