அவுஸ்திரேலியாவின் பிரதிப்பிரதமர் பார்னபி ஜொய்ஸ் இரட்டை பிரஜாவுரிமைக்குரியவர் என்பதை நியுசிலாந்து உறுதிசெய்துள்ளதை தொடர்ந்து அவுஸ்திரேலிய அரசியலில் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது
நியுசிலாந்தின் உள்துறை அமைச்சரின் அலுவலகம் நியுசிலாந்து பிரஜையொருவரிற்கு பிறந்த குழந்தைக்கு நியுசிலாந்து பிரஜாவுரிமை வழங்கப்படுவது வழமை என தெரிவித்துள்ளதை தொடர்ந்தே இந்த சர்ச்சை உருவாகியுள்ளது.
இதனை உறுதிசெய்துள்ள நியுசிலாந்து பிரதமரும் அவுஸ்திரேலிய பிரதி பிரதமர் ஓரு நியுசிலாந்து பிரஜை என தெரிவித்துள்ளார்.
எனினும் தான் அவுஸ்திரேலிய சட்டத்தை மீறவில்லை என தனக்கு சட்டத்துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர் எனவும் தான் தொடர்ந்தும் பிரதிபிரதமராக பதவி வகிக்கப்போவதாகவும் பார்னபி ஜெய்ஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரமே நியுசிலாந்து தூதரகம் தனக்கு இது குறித்து அறிவித்ததாகவும் தான் இதன் காரணமாக அதிர்ச்சியடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தான் எப்போதும் அவுஸ்திரேலிய பிரஜையாகவே இருந்துள்ளேன் எனவும் தனது அம்மாவும் அவரது தாயாரும் அவுஸ்திரேலிய பிரஜைகள் எனவும் அவர்கள் கடந்த 100 ஆண்டுகளிற்கு மேல் இங்கு வாழும் தலைமுறையை சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தானோ அல்லது தனது பெற்றோரோ வேறு நாட்டு பிரஜை என கருதுவதற்கான காரணம் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொழில் கட்சியினர் பிரதி பிரதமா பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அதேவேளை பிரதமர் மல்கம் டேர்ன்புல் உயர் நீதிமன்றம் தனது முடிவை வழங்கும் வரை ஜொய்ஸ் பதவியில் நீடிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
இரட்டை பிரஜாவுரிமை குறித்த சர்ச்சையில் சமீபத்தில் பல அவுஸ்திரேலியா அரசியல்வாதிகள் சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.