நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் நாடாளுமன்றப் பதவி முத்திரை மற்றும் நாடாளுமன்றக் கடிதத் தலைப்பு போன்றவற்றை மோசடியான முறையில் பயன்படுத்தினார் எனக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலயத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து அந்த விசாரணைகள் குற்றத்தடுப்புப்பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன எனக் கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது பதவிமுத்திரை மற்றும் நாடாளுமன்றக் கடிதத் தலைப்பு போன்றவை களவாடப்பட்டுத் தவறானமுறையில் பயன்படுத்தப்பட்டுள்ளன எனத் தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கடந்த ஜூன் மாதம் கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.
அந்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இந்த நிலையிலேயே விசாரணைகள் குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர் எனவும், இந்த விடயம் தொடர்பாகக் கிளிநொச்சி நீதிவான்மன்றிலும் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.