எம்.எச்.370 – மலேசிய விமானத்தின் தேடும் பணியில் அவுஸ்ரேலியா!

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நடுவானில் காணாமல்போன எம்.எச்.370 என்ற மலேசிய விமானத்தின் தேடுதல் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் கடற்படுகை நிறுவனம் முன்வந்துள்ளது.

மலேசியன் எயார்லைன்ஸ் விமானம் எம்.எச். 370, கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத்தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்டு சென்றபோது, நடுவானில் திடீரென மாயமானது.

இந்த விமானத்தை தேடும் பணியை மலேசியா, அவுஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகள் இணைந்து கடந்த மூன்று ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தன.

இந்தியப் பெருங்கடலில் 1 லட்சத்து 20 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவு வரை தேடியும், மாயமான அந்த விமானத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதன்காரணமாக அந்த விமானத்தைத் தேடும் பணி கடந்த ஜனவரி மாதம் 17ஆம் திகதி நிறுத்தப்பட்டது.

இந்த விமானத்தில் பயணம் செய்த 239 பேரும் பலியாகி விட்டதாக நம்பப்படுகிறது.

எனினும் இதுவரை காலமும் அவர்களின் குடும்பத்தினர் மாயமான விமானத்தை தேடும் பணியை தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த தனியார் கடற்படுகை ஆய்வு நிறுவனமான ஓசியன் இன்பினிட்டி, மாயமான மலேசிய விமானத்தை தேட முன்வந்துள்ளது.

இதை மலேசிய அரசு ஏற்றுக்கொள்ளும் என நம்புவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்நிறுவனத்தினர் கருத்து வெளியிடுகையில்,

“இந்த வாய்ப்பின் விதிமுறைகள் இரகசியமானவை. ஆனால் நாங்கள் முன்வந்திருப்பதை உறுதிபட தெரிவிக்கின்றோம். பொருளாதார இடர்களை பொருட்படுத்தாமல், இந்தப் பணியை மேற்கொள்ள முன் வந்துள்ளோம். சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆக்கப்பூர்வமான பேச்சு நடத்தி வருகின்றோம். எங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் என நம்புகிறோம்” என தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மலேசியா விரைவில் சிறந்த முடிவை அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.