புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகள் ஆமை வேகத்தினை அடைந்திருப்பதாக சபையில் சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வடக்கில் மீண்டும் இராணுவப்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கியின் 2016ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை குறித்த சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
ஊழல் மோசடிகள் குறித்து தற்போது பேசப்படுகின்றது. கடந்த ஆட்சியாளர் தற்போதுள்ளவர்களையும், தற்போதைய ஆட்சியாளர்கள் கடந்த ஆட்சியாளர்களையும் சுட்டிக்காட்டும் படலம் தொடர்ந்தவண்ணமுள்ளது. புதிய ஆட்சியில் மிகவும் மோசமான ஒரு செயற்பாடாக கருதப்படும் பிணை முறிகள் விற்பனை குறித்து குற்றச்சாட்டுக்களில் அமைச்சர் இராஜினாமாவும் செய்திருக்கின்றார்.
இவ்வாறான விடயங்கள் பேசப்பட்டுக்கொண்டிருக்கையில் இந்த நாட்டின் ஒரு தேசிய இனத்திற்கு காணப்படும் பிரச்சினைகள் பராமுகமாக தொடரும் நிலைமையே நீடித்துக்கொண்டிருக்கின்ற அவலத்தினை யாரும் ஏன் கருத்தில் கொள்ளாதிருக்கின்றார்கள் என்பதே எனது கேள்வியாகும்.
எத்தனையோ தடவைகள் நாம் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இந்த சபையில் குறிப்பிட்டுள்ளோம். அதனை விடவும் அத்தியாவசியமாக அந்த மக்களுக்கு அவசியமாக காணப்படுகின்ற பல்வேறு விடயங்களையும் முன்வைத்துள்ளோம். ஆனால் எதற்குமே பதிலைக் காணவில்லை.
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றது. அதன் ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு எமது மக்களுக்கு காணப்பட்டது.ஆனால் கடந்த காலத்தில் மிகவும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டவொரு விடயமாக காணப்பட்ட அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான செயற்பாடுகள் தற்போது ஆமை வேகத்தினை அடைந்திருக்கின்றமையை அவதானிக்க முடிகின்றது.
ஏனைய விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் காட்டும் ஆர்வத்தினை தற்போது அரசியலமைப்பு விடயத்தில் காட்டாது இருக்கின்றமை ஐயப்பாட்டினை ஏற்படுத்தியிருக்கின்றது.
இவ்வாறு நிலைமைகள் காணப்படுகின்ற அதேநேரம் வடக்கில் மீண்டும் இராணுவத்தினர் சுற்றி வளைப்புக்களைச் செய்யும் செயற்பாடுகளும் மக்களை பதிவு செய்கின்ற செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
கிளிநொச்சியில் பல்லவராயன் கட்டு உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான இராணுவப்பதிவு ஆரம்பமாகியுள்ளது. வடக்கின் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறான நிலைமைகள் காணப்படுகின்றன.
எமது மக்கள் அரசாங்கத்திடம் பெரிதாக எதனையும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் தமக்கான வாழ்வாதார வசதிகளை கோருகின்றார்கள்.
நியாயமான தீர்வைக் கோருகின்றார்கள். காணாமல் போன தமது சொந்தங்களுக்கு என்ன நடந்தது என்று கோருகின்றார்கள். அவற்றினை அரசாங்கம் மேற்கொள்ள முடியாதிருப்பது ஏன்?
அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த ஐ.நா நிபுணர் ஊடக சந்திப்பை நடத்தியிருந்தார். அதிலே அவர் சில விடயங்களை குறிப்பிட்டிருந்தார். அவை தொடர்பில் வீரகேசரி பத்திரிகையில் தலைப்புச்செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக காணாமல் போனவர்கள், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றவர்கள், திருமலையில் உள்ள நிலக்கீழ் முகாமில் நடைபெற்ற விடயம் ஆகியவை தொடர்பில் உண்மைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
ஆகவே சர்வதேசமும் எமது மக்கள் கோரும் விடயங்களின் நியாயப்பாட்டினை உணர்ந்துள்ளது. அரசாங்கம் அது குறித்து வெளிப்படைத் தன்மையுடன் பதிலளிக்க கடமைப்பட்டிருக்கின்ற பொறுப்பை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.