டிரம்பை கேலி செய்து வெள்ளை மாளிகை முன்பு வைக்கப்பட்ட கோழி பொம்மை

அமெரிக்க அதிபர் டிரம்பை திறமை இல்லாதவர் என சித்தரிக்கும் வகையில் வெள்ளை மாளிகை முன்பு காற்றடைத்த கோழி பொம்மை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு சர்ச்சைக்குரிய பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டார்.

6 முஸ்லிம் நாடுகளுக்கு விசா கட்டுப்பாடுகள், மெக்சிகோ- அமெரிக்கா எல்லையில் சுவர் எழுப்புதல் போன்ற அறிவிப்புகளால் நாட்டில் குழப்பம் ஏற்பட்டது. தற்போது அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வாஷிங்டன் அதிபரின் அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகைக்கு அருகே காற்றடைத்த கோழி பொம்மை வைக்கப்பட்டுள்ளது. காற்றடைக்கப்பட்ட 30 அடி உயர பலூன் பொம்மை அதிபர் டிரம்பை கேலி செய்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

அது டிரம்ப் கோபத்துடன் பார்ப்பது போன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதை இந்திய வம்சாவளியை சேர்ந்த சமூக சேவகர் தாரன்சிங் பிரன் வைத்துள்ளார். இவர் ஆவணப்பட இயக்குனர் ஆவார்.

அதிபர் டிரம்ப் திறமை இல்லாதவர் என சித்தரித்து காற்றடைத்த கோழி பொம்மை வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.