வௌிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக இன்று(10) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று பனல் ஆற்றிய விஷேட உரையின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். அவர் தனது விஷேட உரையில் தொடர்ந்து கூறியதாவது,
அன்று அமைச்சர்களுக்கு எதிரான குற்றக் கோப்புக்களை விசாரிப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு முடியாதிருந்தது. அந்தவகையில் தற்போது மிகவும் துரிதகதியில் நல்லாட்சியில் அமைச்சர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்காக நான் பெருமைப்படுகின்றேன்.
அதேபோன்று சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு நான் கூறுகின்றேன், கடந்த அரசாங்கம் தொடர்பாக நிலுவையில் உள்ள 87 விசாரணைக் கோப்புகள் தொடர்பாகவும் துரித விசாரணை நடத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
எனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எவ்வித அடிப்படையுமற்றது. அந்தக் குற்றச்சாட்டுக்கள் எவற்றுடனும் எனக்கு தொடர்பு இல்லை. மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள், ஊழல், மோசடியுடன் சம்பந்தப்பட்டவர்களே இதனுடன் தொடர்புபட்டிருக்கின்றார்கள். அவர்களுடைய சதித்திட்டத்தின்படியே இவை இடம்பெறுகின்றன.
இந்த நிலையில் முழு நாட்டுக்கும் முன்னுதாரணமாக நான் தனது பதவியில் இருந்து விலகுகின்றேன். இந்த தீர்மானம் பெருமையுடன் எடுக்கப்பட்ட தீர்மானமே அன்றி வருத்தத்துடனோ அல்லது கஷ்டத்துடனே எடுத்த தீர்மானமல்ல.
நான் பதவியை தியாகம் செய்வது இந்த சபையின் மரியாதைக்காகவே. நான் பதவியை தியாகம் செய்வது இலங்கையின் புதிய அரசியல் கலாச்சாரத்திற்காகவே. நாட்டின் ஜனநாயக ஆட்சியை பாதுகாப்பதற்காகவே நான் எனது பதவியை தியாகம் செய்கின்றேன்.
எந்தக் குற்றச்சாட்டுக்கள் வந்தாலும் நான் தொடர்ந்து போராடுவேன் என்று ரவி கருணாநாயக்க தனது விஷேட உரையில் கூறினார்.