சிட்னியில் இருந்து துபாய் நோக்கி பயணமான கப்பல்!

Sea Princess எனும் ஆடம்பர கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து தப்பிக்க 10 நாட்கள் இரவும் பகலும் கடுமையாக போராடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து 1,900 பயணிகளுடன் Sea Princess எனும் சொகுசு கப்பல் ஐக்கிய அமீரகத்தின் துபாய் நோக்கி பயணமாகியுள்ளது.

இந்த நிலையில் குறித்த கப்பலானது இந்திய பெருங்கடல், அரேபிய கடல், ஏடன் வளைகுடா மற்றும் சூயஸ் கால்வாய் வழியாக பயணம் மேற்கொண்டபோது சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியில் சிக்காமல் இருக்க கடும் போராட்டத்தை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது.

 

குறித்த பகுதிகள் வழியாக பயணப்பட்ட கப்பலானது தொடர்ந்து 10 நாட்கள் இரவும் பகலும் எவ்வித விளக்குகளோ காதை பிளக்கும் இசை நிகழ்ச்சிகளோ எதும் கூடாது என நிர்வாகம் வலியுறுத்தியதன் பேரில் அச்சத்தின் நடுவே பயணமாகியுள்ளது.

குறித்த 10 நாட்களும் பேய் கப்பல் போன்று மயான அமைதி குடிகொண்டிருந்ததாக அந்த கப்பலில் பயணப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

சோமாலிய கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல் மிகுந்த பகுதிகளானதால், அதில் பயணம் செய்த 1900 பயணிகளும் கடும் நெருக்கடியான சூழலை உணர்ந்துள்ளனர்.

கொள்ளையர்களிடம் சிக்கியிருந்தால் அவர்கள் பயணிகளுடன் கப்பலையும் சோமாலியா கொண்டு சென்றிருப்பார்கள், பின்னர் பெருந்தொகை கேட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு மிரட்டல் விடுத்திருப்பார்கள். கப்பல் ஊழியர்களை கொடூரமாக தாக்குவது என்பது சாதாரணம் என அதில் பயணம் செய்த ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சாளரங்கள் அனைத்தும் அந்த 10 நாட்களும் மூடியே இருந்தன. எந்த கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படவில்லை. இரவு மட்டுமல்ல பகலிலும் விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தது.

மட்டுமின்றி கப்பலில் இருந்த 1,900 பயணிகளுக்கும் கடற்கொள்ளையர்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டால் மேற்கொள்ளவேண்டிய பயிற்சியும் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கப்பலில் பயணம் செய்த அனைவரிடமும் நடந்தவற்றிற்கு மன்னிப்பு கோரிய அதன் தலைவர், கடற்கொள்ளையர் அச்சுறுத்தல் என்பது உண்மையே ஆனால் அதை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டியது நமது கடமை எனவும் தெரிவித்துள்ளார்.

சிட்னியில் இருந்து துபாய் வரையான 104 நாட்கள் பயணத்திற்கு 1,900 பயணிகள் தலா 10,000 டொலர் கட்டணமாக செலுத்தியிருந்துள்ளனர்.

கடந்த 12 ஆண்டுகளில் குறிப்பிட்ட பாதை வழியாக சென்ற 6 சொகுசு கப்பல்களை சோமாலிய கடற்கொள்ளையர்கள் தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.