வீட்டுக்குள்ளிருந்தே உலகம் சுற்றி வந்த அவுஸ்ரேலியர்!

அவுஸ்ரேலியாவில் கடந்த 20 ஆண்டுகளாக பயம் தொடர்பான பிரச்னையினால் பாதிக்கப்பட்டிருந்த பெண்மணி ஒருவர் அந்த நிலையில் இருந்து மீண்டு வந்து சாதித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் 43 வயது ஜாக்கி கென்னி, கடந்த 20 ஆண்டுகளாக agoraphobia என்ற பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

பொது இடங்களைக் கண்டால் இவருக்கு ஒருவித பயம் வந்துவிடும். இந்த இடம் ஆபத்தானது, பாதுகாப்பு இல்லாதது, விரைவாக வீட்டுக்கு ஓடிவிட வேண்டும் என்று தோன்றும்.

வீட்டிலிருந்து 2 நிமிட தூரத்தில் இருந்த அலுவலகத்துக்கு செல்லும்போது, 23-வது வயதில் முதல் முறையாக இந்தப் பயம் இவருக்கு ஏற்பட்டுள்ளது.

தொடக்கத்தில் இதன் காரணம் ஒன்றும் விளங்கவில்லை என்பதால் நாளடைவில் பயம், தூக்கமின்மை போன்ற காரணங்களால் கென்னி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்.

“எனக்கு ஏதோ பிரச்சினை என்று நான் விரைவில் கண்டுகொண்டேன். உடனே மருத்துவரிடம் சென்றேன். அவர் நான் சாப்பிட்ட உணவுகளில் ஏதோ கோளாறு என்று கூறி அனுப்பிவிட்டார்.

8 ஆண்டுகளுக்கு முன்புதான் எனக்கு பொது இடங்களைக் கண்டால் பயம் என்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். சிகிச்சை ஆரம்பமானது. 3 மாதங்கள் சிகிச்சை எடுத்தும் பயமும் போகவில்லை, தூக்கமும் வரவில்லை.

ஒரு புகைப்படக்காரராக ஆக வேண்டும் என்பதும் உலகம் முழுவதும் செல்ல வேண்டும் என்பதும்தான் என் லட்சியமாக ஆரம்பத்தில் இருந்தது.

இப்போது அதைச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். என்னால் வெளியே செல்ல முடியாது என்பதால், கூகுள் ஸ்ட்ரீட் வியூவுக்கு சென்று விதவிதமான வீதிகளை கவனிக்க ஆரம்பித்தேன்.

எனக்குப் பிடித்த புகைப்படங்களை சேகரித்துக்கொண்டேன். இந்தப் புகைப்படங்களை எடுத்து, திருத்தம் செய்து, என் பிரச்சினையையும் குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் வெளியிட்டேன்.

என் பயம் கொஞ்சம் குறைய ஆரம்பித்தது. தொடர்ச்சியாக இந்த வேலைகளை செய்துகொண்டிருக்கிறேன். வீட்டை விட்டு வெளியே வராமலே, உலகம் முழுவதும் சுற்றி வந்துவிட்டேன்.

இதுவரை 26 ஆயிரம் புகைப்படங்களை சேகரித்து வைத்திருக்கிறேன். என் பயம் வெகுவாகக் குறைந்துவிட்டது. மனநிலையில் மாற்றம் தெரிகிறது.

அருகில் இருக்கும் கடைத் தெருவுக்குச் சென்று வருகிறேன். என் தங்கையின் திருமணத்துக்காக அமெரிக்கா உட்பட மூன்று வெளிநாடுகளுக்கு சென்று வந்தேன்.

மருத்துவத்தால் சரி செய்ய இயலாத ஒரு பிரச்சினையை, நவீன தொழில்நுட்பம் சரி செய்துவிட்டது” என்கிறார் ஜாக்கி கென்னி. இந்தப் பயம் வந்தவர்களால் தனியாக இருக்க முடியாது. 18 முதல் 35 வயதுக்குள் இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது. ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.