தாயக மக்களின் உரிமைக்கான அடிப்படைகளை இல்லாதொழிக்கின்ற அரசியல் செல்நெறிகளை நிராகரித்து, தமிழ் மக்களின் நீடித்த கௌரவமான பாதுகாப்பான அரசியல் செல்நெறிகளுக்கு வெளிப்படையாக புலம்பெயர்ந்த உறவுகளை ஆதரிக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்தார்.
அவுஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர் மெல்பேர்ண் மற்றும் சிட்னி நகரங்களில் நடைபெற்ற சமகால அரசியல் கலந்துரையாடல்களில் பங்குகொண்டு கருத்துரை வழங்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மெல்பேர்ணில் வேலை நாளாக இருந்தபோதும் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலிலும், சிட்னியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின்போதும் ஆர்வத்துடன் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகமான வடக்கு கிழக்கு இணைக்கப்பட்ட சமஸ்டி அடிப்படையிலான தீர்வு அவசியம் என்றும், ஆனால் வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்ட ஒற்றையாட்சியின் கீழ், பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கும் தீர்வுத்திட்டத்தை முன்னெடுக்கவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முன்னெடுக்கின்றது என்றும் அதனை நிராகரித்து தமிழர்கள் தமது எதிர்ப்புக்குரலை பதிவுசெய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
வடக்கு கிழக்கு இணைப்பு என்பது, முஸ்லிம்களின் அபிலாசைகளை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கான அரசியல் உத்தரவாதங்கள் இருக்கக்கூடிய இணைப்பை முஸ்லிம்களின் முற்போக்கான அரசியல் தலைவர்கள் இப்போதும் ஏற்றுக்கொள்வதாகவும் தமிழ்மக்களுடன் இணைந்திருந்தாலே தமக்கு உரிமைக்கான பாதுகாப்பு உண்டு என அவர்கள் சிந்திக்க தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், சிலவேளைகளில் வடக்கு கிழக்கு இணைப்பை அவர்கள் நிராகரித்தால், அதற்காக கிழக்கை தனியாக விடாமல் கிழக்கில் உள்ள தமிழர் பகுதிகள் இணைந்த வடக்கு கிழக்கு இணைப்பு ஏற்படுத்தப்படவேண்டும் எனவும் அதுவே கிழக்கு தமிழர்களின் விருப்பம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கான மாற்று அணியை உருவாக்கவிடாமல் இருப்பதற்கான ஒரு தந்திரோபாய நகர்வாகவே முதல்வர் விக்கினேஸ்வரனை சம்பந்தர் பயன்படுத்துவதாகவும், அவரை எப்படி நம்பமுடியும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் தமிழர் உரிமைகள் தொடர்பிலான விடயங்களில் முதல்வர் விக்கினேஸ்வரன் தெளிவான கருத்துக்களையே முன்வைத்துவருவதாகவும், அப்படியானதொருவர் அப்படியான கருத்துக்களை முன்வைக்கும்போது தமிழத்தேசியத்திற்கான பலமாகவே அவரை பார்ப்பதாகவும், சில விடயங்களில் அவரது கருத்துக்கள் விமர்சனத்திற்குரியதாக இருந்தாலும், அவை பற்றிய கருத்துக்களை அவருக்கு தெரியப்படுத்தி திருத்தங்களை கொண்டுவரமுடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்களில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னனி போட்டியிடுவதன் மூலம், தமிழரின் ஒற்றுமைக்கான குரல் பலவீனமடைந்துவிடுமே என்ற கேள்விக்கு பதலளித்த அவர், ஒற்றுமை என்பது தமிழர்களின் அடிப்படையான உரிமைகளை பெற்றுக்கொள்ளவதற்கானதாக இருக்கவேண்டும் எனவும், ஆனால் அந்த ஒற்றுமையென்ற பெயரில் தமிழரின் உரிமைகளுக்கான சந்தர்ப்பங்கள் தவறவிடப்பட்டு தமிழ்மக்கள் கைவிடப்படுகின்ற சூழல் உருவாகின்றது. எனவேதான் மாற்று அணியை ஒற்றுமையாக அனைவரும் ஆதரிக்கவேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.
இரண்டு இடங்களில் நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்புகளிலும் கலந்துகொண்டோரில் பலரும், மாற்று அணிக்கான தேவையை வலியுறுத்தியதுடன் அதற்கான முன்னெடுப்பை பலமாக முன்னெடுக்க எத்தகைய செயற்றிட்டங்களில் ஈடுபடலாம் என்ற விவாதங்களிலும் தமது கவனத்தை செலுத்தியதை காணமுடிந்தது.