கூட்டு பயிற்சியின்போது அவுஸ்ரேலிய கடல் பகுதியில் அமெரிக்க ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 3 வீரர்கள் மாயம் ஆனார்கள்.
அவுஸ்ரேலியா வின் குவின்ஸ்லேண்ட் கடல் பகுதியில் அமெரிக்கா மற்றும் அவுஸ்ரேலியா கடற்படையினர் கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.
அதில் அமெரிக்காவின் எம்.வி.-22 ஆஸ்பிரே என்ற போர் விமானங்கள் ஈடுபட்டுள்ளன. இந்த பயிற்சியில் அமெரிக்கா, ஆஸ்திரேலியாவை சேர்ந்த 30 ஆயிரம் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் அமெரிக்காவின் ஒரு போர் விமானம், விமானம் தாங்கி கப்பலில் தரை இறங்க முயன்றது. அப்போது அந்த விமானம் விபத்துக்குள்ளாகி கடலுக்குள் விழுந்து நொறுங்கியது.
அந்த விமானத்தில் மொத்தம் 26 கடற்படை வீரர்கள் இருந்தனர். தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்தனர். அவர்கள் 23 பேரை பத்திரமாக மீட்டனர்.
ஆனால் 3 வீரர்களை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. அதில் சிறிய படகுகள், மற்றும் விமானம் ஈடுபட்டுள்ளன.