நடிகை சமந்தா-நாக சைதன்யா திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபற்ற வருகிறது. கோவாவில் 3 நாட்கள் திருமண சடங்குகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.
நடிகை சமந்தாவும் நடிகர் நாக சைதன்யாவும் திருமணத்துக்கு தயாராகி உள்ளனர். நாக சைதன்யா பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் ஆவார். இவர் தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். தெலுங்கு படமொன்றில் ஜோடியாக நடித்தபோது இருவரும் காதல் வயப்பட்டனர். இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.
அக்டோபர் மாதம் திருமணத்தை முடிக்க திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளில் இரு வீட்டாரும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். கோவாவில் திருமணம் நடக்க உள்ளது. இதற்காக அங்கு அக்டோபர் 6-ந் தேதி முதல் 9-ந் தேதிவரை 4 நாட்கள் திருமண சடங்குகள் நடத்தப்படுகின்றன. சமந்தா கிறிஸ்வத மதத்தை சேர்ந்தவர் என்பதால் 8-ந் தேதி கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடக்கிறது. அதன்பிறகு இந்து முறைப்படி திருமணம் செய்துகொள்கின்றனர்.
சமந்தாவுக்கு திருமண புடவை தயாராகி உள்ளது. நாக சைதன்யாவின் பாட்டியும் பிரபல தயாரிப்பாளர் டி.ராமாநாயுடுவின் மனைவியுமான ராஸ்வேரியின் சேலையை முகூர்த்த புடவையாக அணிந்து கொள்கிறார். இதற்காக அந்த புடவையை நவீன காலத்துக்கு ஏற்ப புதுப்பித்து தரும் பொறுப்பை பிரபல மும்பை டிசைனர் கிரேஷா பஜாஜிடம் ஒப்படைத்து உள்ளனர்.
புடவையில் நவீன வேலைப்பாடுகள் செய்யும் பணிகள் நடக்கின்றன. பாரம்பரியமான இந்த சேலையை முகூர்த்த புடவையாக அணிந்து கொள்வது பெருமை அளிக்கிறது என்று சமந்தா கூறியுள்ளார். திருமணத்துக்கான தங்க, வைர நகைகளும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
திருமணம் குறித்து சமந்தா கூறும்போது, “எனக்கு நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது. இதற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். சிறந்த கதாநாயகி என்பதை விட சிறந்த பெண் என்ற பெயர் வாங்கவே நான் விரும்புகிறேன். இதற்காகத்தான் சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறேன். எனக்கு நிறைய கொடுத்துள்ள கடவுளுக்கு ஏழைகளுக்கு உதவிகள் செய்வதன் மூலம் நன்றிக் கடனை திருப்பி செலுத்தி வருகிறேன்” என்றார்.