அவுஸ்ரேலிய குடியுரிமைச் சட்டத்தை மாற்றியமைப்பதற்கான அரசின் சட்டமுன்வடிவில், மாற்றங்களைச் செய்வது தொடர்பில், அவுஸ்ரேலிய செனட்டர்கள் ஆலோசிக்க வேண்டுமென ஐ.நா சபை தெரிவித்துள்ளது.
அவுஸ்ரேலிய அரசு முன்மொழிந்துள்ள மாற்றங்கள், அகதிகளுக்கு பாதகமாக அமையும் என சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை சர்வதேச விதிமுறைகளை மீறும் வகையில் அமையக்கூடுமென ஐ.நா வின் அகதிகளுக்கான அமைப்பான UNHCR சுட்டிக்காட்டியுள்ளது.
குடியுரிமைச் சட்டத்தை மாற்றியமைப்பதற்கான அரசின் சட்டமுன்வடிவினை ஆராயும் செனட் குழுவிடம், 500 தனிநபர்கள் மற்றும் அமைப்புக்கள் தமது கருத்துக்களைச் சமர்ப்பிக்கின்ற நிலையில், UNHCR-உம் இதில் அடங்குகிறது.
Permanent Residency எனப்படும் நிரந்தர வதிவிட உரிமை பெற்றபின்னர், ஒரு ஆண்டு நாட்டில் வாழ்ந்தால் அவர்கள் குடியுரிமை பெற தகுதி பெறுவர் என்ற நிபந்தனையை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அதாவது ஒருவர் வதிவிட உரிமையுடன் 4 ஆண்டுகள் நாட்டில் வாழ்ந்திருந்தால் மட்டுமே குடியுரிமை பெற முடியும்.
அத்தோடு, ஆங்கிலப்புலமையை நிரூபித்தல், பிற சமூகத்தோடு இணைந்து வாழப் பழகியிருத்தல் என்பது அவசியம்.
இந்நிலையில் ஆங்கிலப்புலமையை நிரூபிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள உயர் வரையறை, நீண்ட கால காத்திருப்பு, குற்றவியல் பதிவுகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படக்கூடிய வாய்ப்பு ஆகிய காரணிகளால் அகதிகளுக்கு அவுஸ்திரேலிய குடியுரிமை பெறுவதில் சிக்கல் நிலை ஏற்படலாம் என UNHCR தெரிவித்துள்ளது.
இதேவேளை புகலிடம் கோரியவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால் அவர்கள் அவுஸ்திரேலியக் குடியுரிமை பெற வேண்டுமெனில் சுமார் 15 வருடங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்படலாம் எனத் UNHCR, தெரிவித்துள்ளது.
இதைத் தவிர்ப்பதற்கு குடியுரிமைச் சட்டத்தில் கொண்டுவரப்படும் சில மாற்றங்களிலிருந்து அகதிகளுக்கு விதிவிலக்கு அளிக்கலாம் என எதிர்வு கூறப்படுகிறது.
இதேவேளை குடியுரிமைச் சட்டத்தை மாற்றியமைப்பதற்கான அரசின் சட்டமுன்வடிவினை ஆராயும் செனற்குழு தனது அறிக்கையை செப்டம்பர் 4ம் திகதியளவில் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.