பொன். கணேசமூர்த்தி தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்துக்காக சாத்வீக வழியில் தன் சிறுவயது முதல் அயராது உழைத்து வந்து விடுதலை வரலாற்றில் இடம்பிடித்தவர்.
பல்துறை கலை ஆற்றல் கொண்ட இவர் இலங்கை மண், வைகறை ஆகிய தொடர் நாடகங்களையும் தனி நாடகங்களையும் உருவாக்கி வழங்கியிருந்தார்.
விடுதலைக் கருத்துக்களை விதைப்பதற்காக அரங்க நாடகங்களும் பொன். கணேசமூர்த்தியினால் பாடசாலைப் பருவம் முதல் அரங்கேற்றப்பட்டுள்ளன.
இன எழுச்சி சஞ்சிகையின் ஆசிரியராக செயற்பட்டவர். வரலாறு சொல்லும் பாடம் என்ற நூலை உருவாக்குவதில் தீவிரமாக உழைத்து வந்தார். மண்ணுக்காக என்ற காணொளி திரைப்படத்தையும் இவர் உருவாக்கினார்.
வில்லிசை, உரைவீச்சு உட்பட்ட பல்வேறுபட்ட வானொலி நிகழ்ச்சிகளை படைத்திருந்த இவர் பெருமளவிலான விடுதலைப் பாடல்களையும் உருவாக்கியுள்ளார். வானொலி, அரங்க திரைப்பட நடிகனாகவும் செயற்பட்ட இவர், பாடலாசிரியராகவும் நாவலாசிரியராகவும் கவிஞராகவும் பாடகராகவும் வில்லிசைக் கலைஞராகவும் சிறப்பாக செயற்பட்டு வந்தார்.
இவர் ஆகஸ்ட் 4, 2006-ல் யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொள்ளப்பட்டார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஆற்றிய பங்களிப்புக்கு மதிப்பளித்து, படுகொலை செய்யப்பட்ட பொன். கணேசமூர்த்திக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மார்ச் 15, 2008-ல் மாமனிதர் விருது வழங்கி மதிப்பளித்தார்.