இந்திய கிரிக்கெட் அணி தற்போது, இலங்கையில் சுற்றுபயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. இந்தத் தொடர் முடிந்த பிறகு, அவுஸ்ரேலியா, நியூஸிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இந்தியாவில் விளையாட உள்ளன.
இந்தியாவில், செப்டம்பர் முதல் டிசம்பர் வரை பண்டிகைக் காலம்தான். இந்தக் காலகட்டதில், இந்தியாவில் கிரிக்கெட் தொடர்கள் நடத்துவது வழக்கம். தற்போது, தொடர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முதலில், ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் நடுவில் டெஸ்ட் போட்டிகள் இல்லை. இந்த சுற்றுப்பயணம், செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 11 வரை திட்டமிடப்பட்டுள்ளது. இதில், முதலாவது ஒருநாள் போட்டி சென்னையில் நடைபெறும் எனத் தெரிகிறது.
அதற்கு அடுத்து, நியூசிலாந்து அணி இந்தியாவில் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தத் தொடரிலும் டெஸ்ட் போட்டிகள் இல்லை. இந்தத் தொடர், அக்டோபர் 22 முதல் நவம்பர் 7 வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இறுதியாக, இலங்கை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள், மற்றும் மூன்று டி20 போட்டிகளில் ஆட உள்ளது. இலங்கைக்கு எதிரான இந்தத் தொடர், முதலில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில்தான் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்திய அணி, தென்னாப்பிரிக்கத் தொடரை முடித்துக்கொண்டு பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் கலந்து கொள்ளும் சுதந்திரக் கோப்பைத் தொடரில் விளையாட உள்ளதால், இலங்கைக்கு எதிரான தொடர் முன்னதாக நடத்தப்படுகிறது.
செப்டம்பர் முதல் டிசம்பர் வரை 11 ஒருநாள் போட்டிகளும், ஒன்பது டி20 போட்டிகளும் மூன்று டெஸ்ட் போட்டிகளும் நடக்க உள்ளதால், இந்தியாவில் பண்டிகைக் கொண்டாட்டத்துடன் கிரிக்கெட் திருவிழாவையும் கொண்டாடத் தயாராகிவிட்டார்கள் ரசிகர்கள்.
இந்தத் தொடர்களுக்கான அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை. பண்டிகைக் காலம் என்பதால், போட்டி நடைபெரும் இடங்கள் மற்றும் தேதிகள்குறித்து ஆலோசனைக்குப் பின்னர் முடிவு செயப்படும் என பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.