தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு சென்னை வடபழநியில் உள்ள இசை அமைப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் தொடங்கியுள்ளது.
தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு 2 வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். தற்போதைய நிர்வாகிகளின் பதவி காலம் நிறைவடைந்ததை அடுத்து புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் சென்னை வடபழநியில் உள்ள இசை அமைப்பாளர்கள் சங்கத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
காலை 8 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும். பின்னர் மாலை 6 மணிக்கெல்லாம் முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலுக்கு மாவட்ட முன்னாள் நீதிபதி பாலசுப்ரமணியம் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இத்தேர்தலில் விக்ரமன் தலைமையில் புதுவசந்தம் என்ற அணியும், புதிய அலைகள் என்ற பெயரில் மற்றொரு அணியும் போட்டியிடுகிறது. தலைவர் பதவிக்குப் போட்டியிடும் விக்ரமன், செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் ஆர் கே செல்வமணிக்கு எதிராக, புதிய அலைகள் அணி வேட்பாளர்களை நிறுத்தவில்லை. சுயேச்சையாக இயக்குநர் ஈ.ராமதாஸ் போட்டியிடுகிறார்.
3400 உறுப்பினர்கள் கொண்ட தமிழ்நாடு இயக்குநர் சங்கத்தில் 2300 பேர் மட்டுமே வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். ஒருவர் மொத்தம் 17 பேருக்கு வாக்களிக்க வேண்டி இருக்கும்.
அணி விவரம்:
புது வசந்தம் அணி: தலைவர் – விக்ரமன், செயலாளர் – ஆர்கே செல்வமணி, பொருளாளர் – பேரரசு, துணைத் தலைவர்கள் – கேஎஸ் ரவிக்குமார், ஆர்வி உதயக்குமார். இணைச் செயலாளர்கள் – ரமேஷ்கண்ணா, மனோஜ்குமார், ஏ வெங்கடேஷ், அறிவழகன் (எ) சோழன்.
புதிய அலைகள் அணி: பொருளாளர் – ஆ.ஜெகதீசன், துணைத் தலைவர் – வி.சுப்பிரமணியம் சிவா, இணைச் செயலாளர் – பி. பாலமுரளி வர்மன், ஜி ஐந்துகோவிலான், நாகராஜன், மணிகண்டன், ஆ.ராமகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
Eelamurasu Australia Online News Portal