லெனோவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டிற்கான அறிவிப்பு புதிய டீசர் மூலம் அந்நிறுவனத்தின் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. புதிய வெளியீடு சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
லெனோவோ நிறுவனம் புதிய கில்லர்நோட் டீசரை தொடர்ந்து ஆகஸ்டு 9-ம் தேதி புதிய ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதாக சமூக வலைத்தளங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
லெனோவோ பதிவிட்டுள்ள புதிய ஜிஃப் புகைப்படத்தில் எண் 8 பிரகாசமாக தெரிவதை போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய கில்லர் நோட் ஆகஸ்டு 9-ம் தேதி வெளியிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக லெனோவோ நிறுவனம் K7 நோட் ஸ்மார்ட்போனினை வெளியிடும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய K8 நோட் ஸ்மார்ட்போன் வெளியிடப்பட இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியுடன், அடுத்த நோட் ஸ்மார்ட்போன் எவ்வாறு அழைக்கப்படும் என்ற கேள்வியை லெனோவோ தனது வாடிக்கயாளர்களிடம் கேட்டிருந்தது. இந்நிலையில் புதிய K8 வெளியிடப்படுவது உறுதியானதைத் தொடர்ந்து லெனோவோ K7 ஸ்மார்ட்போனினை வெளியிடாமல் தவிர்த்து இருப்பது தெரியவந்துள்ளது.
முன்னதாக ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 3T மாடலுக்கு அடுத்தப்படியாக ஒன்பிளஸ் 4 வெளியிடாமல் நேரடியாக ஒன்பிளஸ் 5 மாடலை வெளியிட்டது. இதேபோல் கடந்த ஆண்டு சாம்சங் நிறுவனமும் நோட் 6 மாடலை தவிர்த்து நேரடியாக நோட் 7 ஸ்மார்ட்போனினை வெளியிட்டது.
லெனோவோ நிறுவனம் நேரடியாக 8 மாடலை வெளியிடுவதற்கான காரணம் அறியப்படாத நிலையில், புதிய ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா அமைப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியிடப்பட்ட லெனோவோ K6 நோட் ஸ்மார்ட்போனில் ஒற்றை கேமரா மட்டுமே வழங்கப்பட்டது.
சமீபத்தில் வெளியாகியுள்ள பென்ச்மார்க்கிங் தகவல்களில் புதிய லெனோவோ K8 நோட் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம், 1.4 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ X20 பிராசஸர், 4ஜிபி ரேம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. முந்தைய மாடலில் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் மற்றும் 3 ஜிபி ரேம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.