ஆட்சியைக் கவிழ்க்கத் துடிக்கும் மகிந்த அணியின் முயற்சிக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது என நேற்றுச் சபையில் திட்டவட்டமாக அறிவித்தார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன்.
தன்னையும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் கடுமையாக விமர்சித்த மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவுக்கு சம்பந்தன் உடனடியாகவே பதிலடி கொடுத்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின்கீழ், எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் பிரகடனம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
அரசு உடனடியாகத் தேர்தலை நடத்தவேண்டுமென எனக்கு முன்னர் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தினார். உள்ளூராட்சிச் சபைத் தேர்தலையோ அல்லது மாகாண சபைத் தேர்தலையோ அவர் கோரவில்லை. நாடாளுமன்றத் தேர்தலையே மகிந்த அணியினர் குறிவைத்துள்ளனர். அதையே அவர் கோரினார்.
அரசை முடக்கவேண்டும்; ஆட்சியைக் குழப்பவேண்டும்; ஆட்சியைக் கவிழ்க்கவேண்டும் என்பதே மகிந்த அணியின் தொடர்ச்சியான நோக்கமாக – அழுத்தமாக இருக்கின்றது. இது மக்கள் ஆணைக்குப் புறம்பான செயலாகும்.
அரச தலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச மீண்டும் போட்டியிட்டார். அதில் அவர் தோல்வி அடைந்தார். தலைமை அமைச்சர் பதவிக்காகவும் அவர் களமிறங்கினார். அதற்கு மக்கள் ஆணை வழங்கவில்லை. மாற்றுத் தரப்புக்கே மக்கள் ஆட்சியமைப்பதற்குரிய ஆணையை வழங்கினர்.
எனவே, தேர்தல் ஊடாக ஆட்சியைக் கவிழ்ப்பதை விடுத்து, உரிய காலத்துக்கு முன்னர் அதைச் செய்ய முற்படுவது மக்கள் தீர்ப்புக்கு எதிரான செயலாகும்.
குறிப்பிட்ட காலத்துக்கு முன்னர் ஆட்சியைக் கவிழ்க்க வேண்டுமானால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து அதை அரசமைப்புக்கு உட்பட்ட ரீதியில் செய்யலாம். இப்படி எதையும் செய்யாது – மக்கள் ஆணைக்கு எதிராகச் செயற்படும் மகிந்த அணி உறுப்பினர் தினேஷ் குணவர்தன என்னிடமிருந்து எத்தகைய ஆதரவை எதிர்பார்க்கின்றார்?
ஜனநாயகக் கட்டமைப்பு வலுப்பெறவேண்டுமானால் தொழிற்சங்க கட்டமைப்பு அவசியம். அவற்றின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்கவேண்டும்.
எனினும், அரசியல் நோக்கங்களோடு முறையற்ற விதத்தில் அத்தியாவசிய சேவைகளை முடக்கும் வகையில் தொழிற்சங்கப் போராட்டங்களை நடத்தி அரசைக் கவிழ்ப்பதற்கான முயற்சிகளை ஏற்க முடியாது.
இதனைத் தடுப்பதற்கு அரசு தைரியமான முடிவுகளை எடுத்து அவற்றைத் தைரியமாக நடைமுறைப்படுத்தவேண்டும்-என்றார்.