அவுஸ்திரேலிய அரசாங்கம் கொள்கை ரீதியில் மனித உரிமைகளிற்கு எதிரானது !

அவுஸ்திரேலியாவின் தற்போதைய அரசாங்கம் கொள்கை ரீதியில் மனித உரிமைகளிற்கு எதிரானது என அந்நாட்டின் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் கிலியன் டிரிக்ஸ் (Gilion Tricks ) தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து இந்த வாரத்துடன் ஓய்வுபெறவுள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பெண்களின் மனித உரிமை, பூர்வீகக்குடிகளின் மனித உரிமை, அகதிகளின் மனித உரிமை என சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்களது மனித உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை விவகாரங்களில் அவுஸ்திரேலியா பின்னோக்கி செல்வதற்கு தற்போதைய அரசாங்கத்தை குற்றம்சாட்டவேண்டும் எனவும் அரசாங்கம் கொள்கைரீதியாக மனித உரிமைகளை எதிர்ப்பதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டொனி அபொட் தேர்தல் பிரச்சார காலத்தில் அவுஸ்திரேலியாவின் மனித உரிமை ஆணைக்குழுவை இல்லாமல் செய்வேன் என பிரச்சாரம் செய்தவர் என சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் கிலியன் டிரிக்ஸ் கடந்த ஓன்றரை வருடங்களாக அரசாங்கம் இதனை பின்பற்றுகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கென மனித உரிமைகள் சட்ட மூலம் இல்லாமையும் இதற்கு காரணம் எனத் தெரிவித்த மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பயங்கரவாதம் குறித்த அச்சத்தை பயன்படுத்தி அமைச்சர்களின் கரங்களில் அதிகாரத்தை குவிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.