தெற்கு அவுஸ்ரேலிய மாநிலத்திற்கென, மிகப்பெரிய மின் சேமிப்புக் கலனை நிறுவும் பணிகளில் இறங்கி உள்ளது, டெஸ்லா. மின் கார் தயாரிப்பாளரான, டெஸ்லாவின் அதிபர் எலான் மஸ்க், இதற்கான ஒப்பந்தத்தை, அந்த மாநில அரசுடன் கையெழுத்திட்டு உள்ளார்.
டெஸ்லா நிறுவனம், ‘பவர் வால்’ என்ற வீட்டு மின் சேமிப்புக் கலன்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், 2016ல் புயல், வெப்ப அலை ஆகியவற்றால், தெற்கு அவுஸ்ரேலிய மாநிலத்தில் மின் அமைப்புகள் சேதமடைந்தன. அப்பகுதி மக்கள், மின்சாரமின்றி பல நாட்கள் அவதிப்பட்டனர். எனவே தான், அம்மாநில முதல்வர், பெரிய மின் சேமிப்பு தொகுப்பை உருவாக்க முடிவு செய்தார்.
இதற்கு டெஸ்லாவின், ‘பவர்பேக்’ என்ற மின் சேமிப்புக் கலன் தொழிற்நுட்பம் உதவும் என, வல்லுனர்கள் கருதினர். இதையடுத்து, 126 மெகாவாட் மின்சாரத்தை சேமிக்கும், லித்தியம் அயனி மின் சேமிப்புக் கலன் தொகுப்பை அமைத்துத் தர, எலான் மஸ்க் முன்வந்தார். இந்த தொகுப்பிலிருந்து, 100 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.
கையெழுத்தானதிலிருந்து, 100 நாட்களுக்குள் இத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரப்போவதாக மஸ்க் அறிவித்துள்ளார். அதாவது, டிசம்பருக்குள் அது முடியாவிட்டால், பல கோடி பெருமானமுள்ள மின் சேமிப்புக் கலன் தொகுப்பை, தெற்கு அவுஸ்ரேலிய மக்களுக்கு இலவசமாக தரப்போவதாக, மஸ்க் உறுதியளித்து உள்ளார்.