லேசர் கதிர்கள், அறுவை முதல் அளவை வரை பலவற்றிற்கு பயன்படுகின்றன. சமீபத்தில், உலகிலேயே மிகவும் கூர்மையான லேசர் கதிர்களை, விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். இந்த லேசர் கதிர்களின் அலைவரிசை, வெறும், 10 மெகாஹெர்ட்ஸ் மட்டுமே. லேசர் கதிர்கள் துல்லியத்திற்கு பெயர் போனவை என்றாலும், அவற்றின் அலைவரிசை அடிக்கடி மாறுபடும் தன்மையுடையவை.
இதனால் தான், மிகக் கூர்மையான, சிறிய லேசர் கதிர்களை உருவாக்க, விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர். இந்த புதிய லேசரை, ஜெர்மனி மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆராய்ந்து உருவாக்கி உள்ளனர். இவர்களது கூரிய லேசர் கதிர்கள், 10 மெகாஹெர்ட்ஸ் ஒளி அலை நீளம் கொண்டவை.
இவை, 11 வினாடிகள் வரை மட்டுமே, ஒரே அலைவரிசையில் இயங்கும். ஆனால், அதற்குள், 33 லட்சம் கி.மீ., தொலைவு அளவுக்கு லேசர் கதிர் பயணிக்க வல்லது. அதாவது, இந்த தொலைவு, பூமிக்கும், நிலவுக்கும் இடையே, 10 முறை பயணிப்பதற்கு இணையாகும். பேப்ரி-பெரோட் சிலிக்கன் ஒத்ததிர்வு கருவிகளை கொண்டு, இச்சாதனையை செய்துள்ளனர் விஞ்ஞானிகள்.
அளவில், 21 செ.மீ., உள்ள இச்சாதனத்தை மேலும் குளிர்விக்க வழியை கண்டறிந்தால், 1 மெகாஹெர்ட்ஸ் அளவுக்கு சிறிய லேசர் கதிரை உருவாக்க முடியும். கூர்மையான லேசர் கதிர்கள், அணுக் கடிகாரத்தின் துல்லியத்தை கூட்டவும், அதிகுளிர் அணுக்களை அளக்கவும் பயன்படும்.